கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கோவை, மேட்டுப்பாளையத்தில் 3 வீடுகள் இடிந்து விழுந்தது. இந்த கோர சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் தூக்கத்திலேயே உயிரிழந்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 6-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் கோவை மேட்டுப்பாளையத்தில் பெரும் துயரம் நிகழ்ந்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்றிரவு பெய்த கனமழையால் 3 வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி உறக்கத்திலேயே 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம், நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் உள்ள குடியிருப்பில் கனமழை காரணமாக கருங்கல் சுவர் திடீரென இடிந்து பக்கத்தில் உள்ள வீடுகள் மீது விழுந்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் வீட்டினுள்ளே உறங்கிக் கொண்டிருந்த அக்குடியிருப்பு மக்கள் உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அதிகாலை 3:30 மணியளவில் நடைபெற்றுள்ளது. 3 வீடுகளில் வசித்த 15 பேர் இதில் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், பேரிடர் மேலாண்மைத்துறையினர், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். இன்று காலை முதல் நடைபெற்ற மீட்புப்பணியில் இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த விபத்து நடந்த பகுதியில் நேற்றிரவு அவர்களின் உறவினர்களும் தங்கியதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
subscribe to our top stories