சபரிமலையில் மீண்டும் ஒரு பெண் சுவாமி தரிசனம் – 36 வயது பெண் முதியவர் போல் வேடமணிந்து சென்றுள்ளார்


கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்ற நடைமுறை நீண்ட காலமாக பின்பற்று வந்தது. இந்நிலையில் இதற்கு எதிராக பல்வேறு மகளிர் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 28-ம் தேதி அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பினால் சபரிமலை கோயிலுக்குச் செல்ல முயலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் செல்ல முயல்வதும் அவர்களை பக்தர்கள் தடுப்பதும் தினம்தோறும் செய்திகளாக வந்த நிலையில் கடந்த 2-ம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து மற்றும் மலப்புரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய 2 பெண்கள் சபரிமலைக்கு சென்று சந்நிதானத்துக்குள் ஐயப்பனைத் தரிசனம் செய்தனர். 2 பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் சென்று வந்ததால் கேரள மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

கேரளாவின் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் கேரள மாநிலம் சாத்தனூரைச் சேர்ந்த மஞ்சு என்ற 36 வயதான பெண் முதியவர் போல் வேடமணிந்து, சபரிமலை சந்நிதானத்துக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். இது குறித்து ‘சபரிமலையை நோக்கிய மறுமலர்ச்சி கேரளா’ என்ற அமைப்பு வீடியோ ஒன்றை தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் சபரிமலை சென்றதை மஞ்சு ஒப்புக்கொண்டுள்ளார்.

அந்த வீடியோவில் பேசியுள்ள மஞ்சு “நான் ஜனவரி 8-ம் தேதி சபரிமலைக்குச் சென்றுவந்தேன். திருச்சூரில் இருந்து பேருந்து வழியாகவே சென்றேன். என்னை இளம் பக்தர் என யாரும் தடுக்கவில்லை. பிற பக்தர்களைப் போலவே நானும் அமைதியான முறையில் இருமுடி கட்டுடன் கோயிலுக்குள் சென்று ஐயப்பனைத் தரிசனம்செய்தேன். நான் கோயில் சந்நிதானத்துக்குள் இரண்டு மணிநேரம் இருந்து பல்வேறு பூஜைகளில் கலந்துகொண்டேன்” என்று தெரிவித்துள்ளார். மஞ்சு காவல்துறையினரின் உதவியை நாடாமல் தாமாக மலை ஏறிச் சென்றுள்ளார். அக்டோபர் மாதமும் இவர் சபரிமலைக்குச் செல்ல பம்பை வரை சென்று, மலை ஏற முடியாமல் திரும்பியுள்ளார். இதையடுத்து தற்போது மஞ்சு மாறு வேடத்தில் மீண்டும் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: General

DON'T MISS