‘பரியேறும் பெருமாள்’ கதாநாயகன் கதிர் பெண் வேடத்தில் நடித்திருக்கும் ‘சிகை’ ஜீ5 தளத்தில் வெளியானது


அடுத்த வாரம் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ மற்றும் நடிகர் அஜீத் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ ஆகிய 2 திரைப்படங்கள் நாளை வெளியாகவுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி 5 திரைப்படங்களுக்கு மேல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய 2 திரைப்படங்கள் மட்டுமே வெளியாகிறது. மேலும் பொங்கலுக்கு வெளியாவதாக ஒரு மாதத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்ட ஆர்.ஜெ.பாலாஜி நடித்த ‘எல்.கே.ஜி’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை. ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய 2 திரைப்படங்களுமே பெரிய நடிகர்களின் திரைப்படம் என்பதால் அதிக திரையரங்குகளை பிடிப்பதற்கு கடும் போட்டியும் இருந்து வந்தது.

இதற்கிடையில் மற்ற திரைப்படங்களை போன்று நடிகர் கதிர் நடித்துள்ள ‘சிகை’ திரைப்படமும் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ‘சிகை’ திரைப்படம் ஜீ5 தளத்தில் வெளியாகும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. தமிழ் திரையுலகில் இதுவரை பார்த்திராத இந்த புதிய அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ‘மதயானை கூட்டம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி ‘விக்ரம் வேதா’, ‘கிருமி’ ஆகிய திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகர் கதிர்.

மேலும் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் பலரது பாராட்டை பெற்றதோடு நல்ல வெற்றியையும் பெற்றது. இந்நிலையில் நடிகர் கதிர் பெண் வேடத்தில் நடித்துள்ள ‘சிகை’ திரைப்படம் அறிவித்ததை போல் இன்று ஜீ5 தளத்தில் வெளியானது. இதுவரை தமிழ் திரைப்படங்கள் வெளியான சில மாதங்களிலேயே நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் போன்ற இணையதளங்களில் வெளியாவது வழக்கம். ஆனால் இது வரை எந்த திரைப்படமும் திரையரங்குகளுக்கு செல்லாமல் நேரடியாக இணையதளத்தில் வெளியாகவில்லை.

இது குறித்து பிபிசி தமிழ் நடிகர் கதிரிடம் பேசிய போது நடிகர் கதிர் கூறியதாவது: “திரையரங்கிற்கு வந்து படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கும், நெட்பிலிக்ஸ் போன்ற தளங்களில் படத்தை பார்ப்பவர்களுக்கும் வெவ்வேறான ரசனை உள்ளது, அந்த வகையில் படத்தை முடித்ததும் சிகையை திரையரங்கில் வெளியிடுவதைவிட ஆன்லைனில் நேரடியாக வெளியிடுவதே சிறந்தது முடிவு செய்தோம். இந்த திரைப்படம் நகைச்சுவை ஏதுமின்றி, முற்றிலும் கதையை மையாக கொண்டு உருவாக்கப்பட்ட த்ரில்லர் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் கூட்டமாக திரையரங்கில் காண்பதைவிட தங்களுக்கு விரும்பிய இடத்தில் எளிமையாக பார்க்கும் வகையிலான இந்த வழியை பின்பற்றுவதே சிறந்தது என்று முடிவு செய்தோம்.” இவ்வாறு நடிகர் கதிர் கூறினார்.

ஒரு வளர்ந்து வரும் நடிகராக உங்களது திரைப்படம் நேரடியாக திரையரங்கில் வெளியாவதை விட இணையதளத்தில் வெளியாவது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று பிபிசி தமிழ் கதிரிடம் கேட்டபோது, “நான் இதற்கு முன்பு நடித்த ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தோடு ஒப்பிடும்போது இந்த படம் முழுவதும் வேறுபட்ட கதைக்களத்தை கொண்டது. அதேபோன்று தொடர்ந்து ரசிகர்களை ஒரேவிதமான தளத்தின் மூலமாக சென்றடைவதைவிட திரையுலகின் அடுத்தகட்டமாக கருதப்படும் இணையதளங்கள் வழியாக இந்த திரைப்படம் வெளியாவதில் எனக்கு மகிழ்ச்சியே. அதுமட்டுமின்றி, எனது திரைப்படம் உலகம் முழுவதும் காலத்துக்கும் அனைவரும் பார்க்கும் வகையில் இருக்குமென்று என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.

ரசிகர்கள் எந்தளவுக்கு இதுபோன்ற தளங்களை நாடிவந்து திரைப்படங்களை காண்பார்கள் என்று நினைக்கிறீர்கள் என்று பிபிசி தமிழ் கேட்டபோது, “கையில் அலைபேசி இல்லாதவர்கள் யாருமில்லை என்ற இந்த காலத்தில் வலுவான, வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படத்தை மக்கள் 29 ரூபாய் செலவழித்து பார்ப்பதற்கு யோசிக்கமாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று கதிர் கூறினார்.

திரையரங்க ரசிகர்களை முதலாக வைத்து எடுத்த இந்த திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவதால் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதா என்று பிபிசி தமிழ் கதிரிடம் கேட்டபோது, “எங்களது இந்த புதுமையான முயற்சியின் மூலம் இலாபமே கிடைத்துள்ளது. ஏனெனில், இணையதளத்தில் படத்தை வெளியிடுவதில் வெற்றி என்பது அந்த குறிப்பிட்ட படத்தின் முதலீட்டு தொகையை அடிப்படையாக கொண்டது. எனவே, திரைப்படங்களுக்கு மட்டுமின்றி, தரமான படைப்புகள் இருந்தும் திரைத்துறையில் கால்பதிக்க முடியாதவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்லும் வழியாக இணையதளங்கள் விளங்கும்” என்று கதிர் கூறினார்.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: Awesome Spotlight

DON'T MISS