சபரிமலை போராட்டத்தில் தாக்கப்பட்ட பெண் ஒளிப்பதிவாளர் – தாக்கப்பட்ட போதும் அழுதுகொண்டே வீடியோ எடுத்தார்


கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்ற நடைமுறை நீண்ட காலமாக பின்பற்று வந்தது. இந்நிலையில் இதற்கு எதிராக பல்வேறு மகளிர் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி அனைத்து வயது பெண்களும் ஐயப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தது. சபரிமலைக்கு பெண்கள் செல்வதை விரும்பாத சில இந்து அமைப்புகளும், பக்தர்கள் சிலரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். கோயிலுக்குள் நுழைய முற்பட்ட பெண்களை தடுத்தனர். இதனால் சபரிமலையில் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் இருக்க 144 தடை உத்தரவு போடப்பட்டு போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. மேலும் 144 தடை உத்தரவை இந்த மாதம் ஜனவரி 5-ம் தேதி வரை கேரள அரசு நீட்டித்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை கேரள மாநிலம் மலாபுரத்தை சேர்ந்த கனகதுர்கா, கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து ஆகிய 40 வயது பெண்கள் இருவரும் சபரிமலை கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வலதுசாரி அமைப்புகள் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்களிலும் வன்முறையிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. நேற்று வலதுசாரி அமைப்புகள் திருவனந்தபுரத்தில் நடத்திய போராட்டத்தில் பல பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டனர்.

அதில் கைராளி தொலைக்காட்சியில் பணிபுரியும் ஷாஜிலா அப்துல்ரஹ்மான் என்ற பெண்ணும் தாக்கப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஷாஜிலாவை சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்கியதும் ஷாஜிலா அழ ஆரம்பித்துள்ளார். இருப்பினும் தன் கடமையைச் செய்யும் நோக்கில் தாக்கப்பட்ட போதும் வீடியோ எடுத்துள்ளார். ஷாஜிலா அழுதுக் கொண்டே வீடியோ எடுத்திருப்பது புகைப்படமாக எடுக்கப்பட்டது. அந்த படம் தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து என்டிடிவி சேனலுக்கு ஷாஜிலா பேசிய போது ““5, 6 பேர் என்னைப் பின்னால் இருந்த தாக்கினால், நான் என்ன செய்ய முடியும். நான் அழுதது பயத்தின் காரணமாக அல்ல. வீடியோ எடுக்க நிறைய விஷயங்கள் இருந்தும் அதை சரிவர எடுக்க முடியவில்லையே என்றுதான் கஷ்டப்பட்டேன். எனது வலியை மற்றவர்கள் அறியக் கூடாது என்று நினைத்தேன். அதனால்தான், நான் கேமராவை வைத்து முகத்தை மூடிக் கொண்டேன்” என்று சம்பவத்தை விவரித்துள்ளார்

மேலும் ஷாஜிலாவின் படத்தை பலர் சமூக வளைதளங்களில் பகிர்ந்து தைரியத்துடன் கடமையை செய்ததாக புகழாரம் சூட்டியுள்ளனர்.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: Awesome Penne

DON'T MISS