‘கஜா’ புயலில் சீற்றத்திலும் 200 தென்னை மரங்களை பாதிப்பிலிருந்து காப்பாற்றிய விவசாயி


வங்கக்கடலில் உருவான ‘கஜா’ புயல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கஜா’ புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் ஏராளமான பயிர்களும், வீடுகளும் சேதமடைந்துள்ளது. மேலும் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மரங்கள் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை மிகுந்த சேதமடைந்துள்ளன. வேதாரண்யத்தில் மட்டும் 4 லட்சம் தென்னை மரங்கள் உட்பட 27.50 லட்சம் மரங்கள் சாய்ந்துள்ளன. இந்நிலையில் பல்லியிரக்கணக்கான தென்னை மரங்களைப் பறிகொடுத்த திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 200 தென்னை மரங்கள் எந்த பாதிப்பும் இன்றி தப்பித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ளது இடும்பா வனம் கிராமம். ‘கஜா’ புயலின் சீற்றத்தால் அதிக அளவில் தென்னை மரங்களை இழந்த கிராமங்களில் இதுவும் ஒன்று. இந்த கிராமத்தில் மட்டும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான தென்னை மரங்கள் சாய்ந்து விட்ட நிலையில் இதே கிராமத்தைச் சேர்ந்த சீனு என்ற விவசாயியின் 200 தென்னை மரங்கள் குறைந்த சேதங்களோடு தப்பியுள்ளது.

இதற்கு காரணம் ஆசிரியர் செல்வகுமார் கூறிய வானிலை முன்னறிவிப்பு. பொதுநல அடிப்படையில் வானிலை நிலவரங்களை கணித்து கூறுபவர் ஆசிரியர் செல்வகுமார். இவரின் கணிப்புகள் எப்போதும் துல்லியமாக இருக்கும். ஆசிரியர் செல்வராஜ் கூறும் வானிலை நிலவரங்களை கடந்த சில வருடங்களாக கேட்டு வந்த விவசாயி சீனு அதற்கேற்றபடி சாகுபடி செய்து வந்தார். இந்நிலையில் ‘கஜா’ புயல் வேதாரண்யம் அருகே தான் கரையைக் கடக்கும் என முன்கூட்டியே துல்லியமாக கணித்து கூறினார் ஆசிரியர் செல்வராஜ். முன்பு தனுஷ்கோடியை அழித்த புயல் போலவே, ‘கஜா’ புயலால் டெல்டா மாவட்டங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படக் கூடும் என எச்சரித்து வந்தார். மேலும் சேதத்தை குறைப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கி இருக்கிறார் ஆசிரியர் செல்வராஜ். தென்னை மரத்தின் தலைக்கனத்தை குறைப்பதன் மூலம் பாதிப்பிலிருந்து மரங்களை ஓரளவு காப்பாற்ற முடியும் என ஆசிரியர் செல்வராஜ் கூறியுள்ளார். இவை அனைத்தையும் கேட்ட விவசாயி சீனு ஆசிரியர் செல்வராஜ் கூறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அதன்படி புயலுக்கு 2 நாட்கள் முன்பே ஆட்களை பணியில் அமர்த்தி ஒவ்வொரு மரத்திலும் தலா 10 பச்சை மட்டையை வெட்டி உள்ளார். மேலும் தேங்காய், இளநீர், குரும்பை உள்ளிட்டவற்றை இறக்கிய நிலையில் குரும்பை மட்டுமே 12 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்துள்ளது. இவை அனைத்தும் நன்றாக தேறி வந்த பிறகு தேங்காயாக பறித்தால் அதன் மதிப்பு ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என சீனு தெரிவித்துள்ளார். மேலும் அவற்றை வெட்டி இறக்குவதற்கு 15000 ரூபாய் செலவழித்துள்ளார் சீனு. ஆசிரியர் செல்வராஜ் கூறியதை கேட்டு சீனு தன்னுடைய கூரை வீடு மற்றும் மாட்டு கொட்டகை மேல் தென்னை மட்டைகளை அடுக்கி கயிற்றால் கட்டியுள்ளார். இதனால் அவருடைய வீடும் மாட்டு கொட்டகையும் குறைந்த சேதத்துடன் தப்பியுள்ளது. மேலும் 30 தென்னை மரங்கள் மட்டுமே விழுந்துள்ளது. மீதமுள்ள 200 தென்னை மரங்கள் பாதிப்பிலிருந்து தப்பியுள்ளது. இது குறித்து எம்.எஸ்.சி படித்துள்ள சீனுவின் மகள் சுபஶ்ரீ கூறுகையில் “பச்சை மட்டைகளை அப்பா வெட்டுறதை பார்த்து பதறிட்டோம். நல்லா வளர்ந்து இருக்கிற மரத்தை இப்படி வெட்டாதீங்கன்னு கெஞ்சினோம். நாங்க சொன்னதால சில மரங்களை மட்டும் விட்டுட்டாரு. அந்த மரங்கள் தான் இப்போ விழுந்து கிடக்குது. அவர் போக்குலேயே விட்டிருந்தா எல்லா மரங்களையும் காப்பாத்தி இருக்கலாம்” என கூறினார்.

ஆசிரியர் செல்வராஜின் துல்லியமான கணிப்பும் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ‘கஜா’ புயலின் பாதிப்புகளை குறைத்துள்ளது. இனி வருங்காலத்தில் பேரிடர்களை எதிர்கொள்ள பலருக்கும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒரு வழிகாட்டியாக அமையும்.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: General

DON'T MISS