காதலர் தின சிறப்பு பகிர்வு #2: காதலர்களுக்கு சிக்கலை உண்டாக்கும் ‘பிரேக் – அப்’ – தவிர்ப்பது எப்படி?


இன்றைய இளைஞர்களில் பெரும்பாலோனோர் காதல் வயப்பட்டாலும் அவர்களிடம் அடிக்கடி புழங்கும் வார்த்தை ‘பிரேக்-அப்’. இந்த காதல் முறிவுக்கு பெரும்பாலும் காதலர்களே காரணமாக இருப்பது தான் வேடிக்கை. தன் துணையுடன் நேரம் செலவிடாமல் இருப்பது, அவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவது உள்ளிட்ட காரணங்கள் காதல் முறிவுக்கு காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த பிரேக் அப்-ஐ தவிர்க்க சில வழிமுறைகள் இதோ:

உங்கள் துணையுடன் அதிக நேரம் செலவிடுங்கள்: இப்பொதெல்லாம் துணையுடன் அதிக நேரம் உரையாடுவதற்காக கைப்பேசி பெரிதும் துணை புரிகிறது. ஆனாலும் காதலிப்பவர்கள் பலரும் தங்கள் துணையின் மீது சொல்லும் முக்கிய குற்றச்சாட்டு தன் துணை தன்னுடன் பேச நேரம் ஒதுக்குவதில்லை என்பது தான். எவ்வளவு வேலை இருந்தாலும் வாரத்தில் ஒரு நாளாவது உங்கள் துணையை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்குங்கள். அதுவே உங்கள் காதலை இன்னும் பலப்படுத்தும். மேலும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள இது மிகவும் உதவும். உங்களுக்கான அழகான நேரத்தை நீங்கள் தான் உருவாக்க வேண்டும். காதலர்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும் போது அவர்களுக்குள் நிகழும் அந்த செல்ல உரையாடல் எப்போதும் நினைவில் நிற்பதோடு உங்கள் காதலின் ஆழத்தையும் அது உணர்த்தும்.

இக்கட்டான நேரத்தில் உங்கள் துணைக்கு ஆதரவாக நில்லுங்கள்: உங்கள் துணை ஏதேனும் பிரச்சினையில் இருந்தாலோ அல்லது அவர் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலோ அவர்களுக்கு துணையாக நிற்பதோடு அவரை தைரியப்படுத்துங்கள். உங்கள் துணை பிரச்சினையில் இருக்கும் போது நீங்கள் அவர் மீது காட்டும் அன்பு தான் உங்கள் காதலை உங்கள் துணைக்கு புரிய வைக்கும். ‘உன் பிரச்சினையை நீயே பார்த்துக் கொள்’ என்று மெத்தனமாக இருக்காதீர்கள். உங்கள் துணை உங்களுக்காக படைக்கப்பட்டவர். அவரின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு அவருக்கு ஆதரவாக நில்லுங்கள்.

அழைத்தால் மீண்டும் அழையுங்கள்: உங்கள் துணை உங்களை செல்ஃபோனில் அழைக்கும் போது நீங்கள் ஏதேனும் முக்கிய வேலையில் இருந்தால் தொடர்பை துண்டிப்பதற்கு பதிலாக முடிந்த வரை கால் அட்டெண்ட் செய்து நீங்கள் முக்கிய வேலையில் இருப்பதை கூறுங்கள். பின் உங்கள் வேலை முடிந்தவுடன் மறக்காமல் அவருக்கு கால் செய்யுங்கள். கால், மெசெஜ்களை தொடர்ந்து தவிர்ப்பது உங்கள் துணைக்கு நிச்சயம் எரிச்சலை கொடுக்கும்.

பொய் வேண்டாம்: உங்கள் துணையிடம் அதிகமாக பொய் கூறுவது அவருக்கு ஒரு நாள் தெரிய வரும் போது நிச்சயம் அது பிரச்சினையை தான் கொடுக்கும். காதலை பொறுத்தவரை ஒருவரையொருவர் பரிபூரணமாக நம்ப வேண்டும். உங்கள் மீதான நம்பிக்கை உங்கள் இணைக்கு குறைய ஆரம்பித்தால் உங்கள் உறவில் விரிசல் ஆரம்பிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மற்றவர்கள் முன் விட்டு கொடுக்காதீர்கள்: உங்கள் துணை உங்களுக்கு உரிமையானவர்கள், ஆனால் அதற்காக மற்றவர்கள் முன்பு அவர்களை மரியாதை குறைவாக நடத்துவது உங்கள் துணைக்கு வருத்தத்தை கொடுக்கும். ஆரம்பத்தில் அவர் மறுப்பு சொல்லாவிட்டாலும் பின்னாளில் அது பிரச்சினையாக மாறும். உங்கள் நண்பர்களாகவே இருந்தாலும் உங்கள் துணையை அவர்கள் முன்பு விட்டுக் கொடுக்காதீர்கள். உங்கள் துணை தவறு செய்தாலும் அதை மற்றவர்கள் முன் கூறி அவரை புண்படுத்தாமல் அவரிடம் தனியாக சொல்லி புரிய வையுங்கள்.

முடிந்த வரை சண்டைகளை நீங்களே பேசி தீர்த்து கொள்ளுங்கள்: காதலில் சண்டைகள் வருவது இயல்பு. சண்டையிட்டு பேசாமல் இருக்கும் போது ஒருவரின் பிரிவை இன்னொருவர் உணரும் தருணத்தில் அந்நியோன்யம் இன்னும் அதிகரிக்கும். அதே நேரத்தில் உங்களுக்குள் நிகழும் முற்று பெறாத சண்டைகளை தனிமையில் சந்தித்து இருவரும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். முடிந்த வரை உங்கள் சண்டைகளை மூன்றாவது நபர் துணையின்றி நீங்களே பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை அப்படியும் சண்டை தொடர்ந்தால் உங்கள் நம்பிக்கைக்குரிய ஒருவரை வைத்து உங்கள் பிரச்சினைகளை பேசுங்கள்.

தடை விதிக்காதீர்கள்: உங்கள் துணை உங்களுக்காக படைக்கப்பட்டவராக இருந்தாலும் அவருக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும். காதலை ஒரு கேடயமாக பயன்படுத்தி அவர்களின் விருப்பங்களுக்கு தடை விதிக்காதீர்கள். உங்களுக்கு பிடித்த படி அவர் நடந்து கொள்ள வேண்டும், நீங்கள் சொல்லும் உடையை தான் அணிய வேண்டும் என்றெல்லாம் நிர்பந்திப்பது உங்கள் உறவில் நிச்சயம் சிக்கலை உண்டாக்கும். உங்கள் துணையின் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுத்து நடக்கும் போது உங்களிடையே ஒற்றுமை பலப்படும். மேலும் உங்கள் துணையின் ரசனைக்கும் உங்கள் ரசனைக்கும் வேறுபாடுகள் இருந்தால் அதை நினைத்து கவலை கொள்ள வேண்டாம். வேறுபட்ட ரசனைகளை கொண்ட இருவர் இணையும் போது அவர்களின் உறவு அத்தனை எளிதில் சலிக்காமல் இருக்கும்.

ஏமாற்றம் கொடுக்காதீர்கள்: உங்கள் துணையின் பிறந்தநாள், நீங்கள் முதன்முதலில் அவரை சந்தித்த நாள், காதலை வெளிப்படுத்திய நாள் உள்ளிட்ட ஸ்பெஷல் நாட்களை நினைவில் வைத்து கொள்ளுங்கள். அந்த நாட்களில் உங்கள் துணைக்கு மறக்க முடியாத சர்ப்ரைஸ் கொடுங்கள். உங்கள் துணையின் பிறந்தநாளில் அவருடன் நேரத்தை செலவிடுங்கள். உங்கள் துணையின் பிறந்தநாளன்று நீங்கள் அவருக்கு வாழ்த்து சொல்லாமல் மறந்து விடுவது அல்லது அவருடன் நேரம் செலவிடாமல் இருப்பது உள்ளிட்ட செயல்பாடுகள் உங்கள் துணைக்கு ஏமாற்றத்தை கொடுக்கும். பின்னாளில் அதுவே பிரச்சினைக்கு வழி வகுக்கும்.

விட்டு கொடுத்து செல்லுங்கள்: காதலுக்கு முதல் எதிரி ஈகோ தான். காதலர்களுக்குள் சண்டை வரும் போது ‘நான் ஏன் முதலில் பேச வேண்டும்’ என்ற ஈகோ அதிகம் தலை தூக்கும். சில நேரங்களில் விட்டுக் கொடுப்பது, பொறுத்துப் போவது, பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் பெரிதுபடுத்தாமல் இருப்பது உறவை நீட்டிக்க துணை புரியும்.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: Love

DON'T MISS