“மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என கம்பீரமாக ஒலிக்கும் அந்த குரல்- இரும்பு மனுஷியின் நினைவலைகள்


“மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என கம்பீரமாக ஒலிக்கும் அந்த குரல் இந்த மண்ணை விட்டு மறைந்து இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆனால் அந்த ஆளுமையின் மறைவு நம் அனைவரையும் இன்று வரை பெரிதளவில் பாதித்து கொண்டு தான் இருக்கிறது. தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், 5 முறை தமிழகத்தின் முதல்வர் என அரசியல் உலகில் பெரும் ஆதிக்கம் செலுத்தியவர் செல்வி ஜெயலலிதா. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருவரங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெயலலிதா 1948-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி கர்நாடக மாநிலம் மேல்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்தவர். பள்ளி பருவத்திலேயே நடிக்கத் தொடங்கி தமிழர்களின் அபிமான நடிகையாக மிளிர்ந்தவர் செல்வி ஜெயலலிதா. சட்டம் படித்து, நல்ல வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது தான் ஜெயலலிதாவின் கனவாக இருந்தது. ஆனால் குடும்பச் சூழ்நிலை காரணமாக அவரை நடிக்க வேண்டும் என நிர்பந்திட்டார் ஜெயலலிதாவின் தாய் சந்தியா. நடிப்புத் தொழிலை அவர் விரும்பி தேர்ந்தெடுக்கவில்லை என்றாலும் தன்னை முழுமையாக அதில் அர்ப்பணித்து கொண்டதால் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.

 

திரையுலகில் தன் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கி தமிழ், தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களில் முத்திரை பதித்து 120-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்தவர் ஜெயலலிதா. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களது இறப்புக்கு பின் அவரது அரசியல் வாரிசாக தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டவர். அரசியல் அரங்கில் அதிமுக உறுப்பினராக அடியெடுத்து வைத்து 1984-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜெயலலிதா. அவரது பேச்சாற்றலை கண்டு வியந்த மூத்த ஊடகவியலாளர் குஷ்வந்த் சிங் ஜெயலலிதாவை வெகுவாக பாராட்டினார். மேலும் அ.தி.மு.க. கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இறக்கும் வரை அக்கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக இருந்தார்.

1989-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சிக்கு எதிர்கட்சி அந்தஸ்து கிடைத்தது. அதன் மூலம் தமிழகத்தின் முதல் எதிர்க்கட்சி தலைவியானார் ஜெயலலிதா. இதையடுத்து 1991-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று முதன்முதலில் தமிழக முதல்வராக அரியாசனத்தில் அமர்ந்தார். அதன் பின் 2001, 2011, மற்றும் 2016 ஆகிய வருடங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில் 2001-2006 காலகட்டத்தில் டான்சி வழக்கு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. மேல் முறையீட்டில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் முதல்வரானார். அதே போல் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறை செல்ல நேர்ந்ததால், முதல்வர் பதவியை இழந்தார். பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டதால், 2015 மே மாதம், தமிழக முதல்வரானார். அதன் பின் 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அரசியலில் சிறந்த பெண் ஆளுமையாக உருவெடுத்தது கம்பீரமாக ஆட்சி செய்து வந்தவர் ஜெயலலிதா. தமிழக அரசியலில், எம்.ஜி.ஆர். காலத்துக்கு பின் ஒரு தலைவர் தொடர்ச்சியாக 2 முறை முதல்வராக அரியாசனத்தில் அமர்ந்தது செல்வி ஜெயலலிதா தான். தமிழக முதல்வராக 2016-ம் ஆண்டு பொறுப்பேற்றவர் செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் மாதம் 5-ம் தேதி இரவு 11:30 மணிக்கு காலமானார். தமிழகம் கடந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியிலும் இந்திய அரசியல் அரங்கிலும் ஜெயலலிதாவின் மறைவு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

என்ன சோதனை ஏற்பட்டாலும் தன்னம்பிக்கையோடு அதை எதிர்கொண்டு யார் மிரட்டலுக்கும் அஞ்சாமல் அதை எதிர்த்து நின்று மாபெரும் பெண் ஆளுமையாக உருவெடுத்து தமிழக அரசியலில் கம்பீரமாக வலம் வந்தவர் செல்வி ஜெயலலிதா. “ஜெ.ஜெயலலிதா எனும் நான்” என ஒலிக்கும் அந்த கம்பீர குரல் இந்த மண்ணை விட்டு மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆனாலும் அவரின் நினைவுகளும், அரசியல் அரங்கில் அவர் விட்டுச் சென்ற சுவடுகளும் இன்னும் மறையவில்லை.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: General

DON'T MISS