குடிப்பதற்கு பணம் கேட்டு அடித்து துன்புறுத்திய மகனுக்கு காவல் நிலையத்தில் இரக்கம் காட்டிய தாய்


அரக்கோணத்தில் உள்ள தலக்கோணம் திருமாம்பழநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஞ்சாலை (வயது 84). இவரது கணவர் பரமசிவம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். பாஞ்சாலை தனது கடைசி மகன் சக்திநாதனுடன் வசித்து வருகிறார். மேலும் பாஞ்சாலை அரசின் முதியோர் உதவித்தொகையாக ரூ.1000 பெற்று வருகிறார். டீ கடையில் வேலை பார்த்து வரும் சக்திநாதனுக்கு குடி பழக்கம் இருந்ததால் குடிப்பதற்கு அடிக்கடி தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

மேலும், குடிப்பதற்கு முதியோர் உதவித்தொகையை கேட்டும், இல்லையேல் மூக்குத்தியை கொடுக்கும் படியும் தன் தாயை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதனால் பாஞ்சாலை அரக்கோணம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வாசலில் காத்துக் கொண்டிருந்தார். அவரை கண்ட துணை காவல் ஆய்வாளர் எஸ்.கே. துரைப்பாண்டியன் மூதாட்டியை கைத்தாங்கலாக உள்ளே அழைத்து சென்றார். மூதாட்டியை அமர வைத்து தேநீர் வாங்கி கொடுத்த பின் பிரச்சினை குறித்து கேட்டறிந்தார்.

இதையடுத்து சக்திநாதனை அழைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அருகில் இருந்த பாஞ்சாலை ‘எனது மகனை அடித்து விட வேண்டாம், அவனை சிறையிலும் அடைக்க வேண்டாம், அவனுக்கு தகுந்த அறிவுரை மட்டும் கூறுங்கள், ஏனேனில் என்னால் என் மகன் கஷ்டப்படுவதை பார்க்க முடியாது’ என கண்ணீர் மல்க கூறினார். இதனையடுத்து சக்திநாதனுக்கு காவல் துறையினர் அறிவுரை அளித்ததோடு இனி தாயை அடிக்கக் கூடாது என்று எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.

தன்னை துன்புறுத்திய மகன் மீது இரக்கம் காட்டிய தாயின் அந்த பாசம் அங்கு காண்போர் அனைவரையும் நெகிழ வைத்தது.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: Entertainment

DON'T MISS