‘நாளைய தீர்ப்பு’ முதல் ‘சர்கார்’ வரை – நடிகர் விஜய்யின் திரைப்பயணம் ஒரு பார்வை


தமிழ் சினிமாவை பொறுத்தவரை பல நடிகர்கள் திரைத்துறையில் கால் பதித்து பெரும் வெற்றிகளை பெற்றுள்ளனர். ஆனால் திரையில் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல் மக்கள் மனதையும் வெல்வது தான் ஒரு நடிகருக்கு மிகப்பெரிய சவால்.

அப்படி பல ரசிகர்களின் மனதை வென்றவர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய். ஒரு நடிகர் நீடித்த நிலையான வெற்றியை அடைந்ததோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடும் அளவுக்கு உச்சத்தை அடைந்துள்ளார் என்றால் அது அத்தனை எளிதல்ல.

நடிகர் விஜய்யை திரைத்துறையில் அறிமுகம் செய்தவர் அவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர். எஸ்.ஏ.சந்திரசேகர் 1981-ல் நடிகர் விஜயகாந்த் நடித்த சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு இயக்குனராக அறிமுகமானவர். அதன் பின் பல வெற்றி படங்களை இயக்கி பெயர் சொல்லும் அளவிற்கு புகழோடு வலம் வந்தவர். நடிகர் விஜய்யை குழந்தை நட்சத்திரமாக 1984-ல் வெளியான ‘வெற்றி’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் செய்தார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். அப்போது நடிகர் விஜய்க்கு 10 வயது தான். அதை தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த ‘குடும்பம்’, ‘வசந்த ராகம்’, ‘சட்டம் ஒரு விளையாட்டு’, ‘இது எங்கள் நீதி’ ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தொடர்ந்து நடித்தார்.

தந்தை இயக்குனராக இருந்ததால் இயல்பிலேயே நடிகர் விஜய்க்கு திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் இருந்து வந்துள்ளது. இதை புரிந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவரை 1992-ல் வெளிவந்த ‘நாளைய தீர்ப்பு’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் செய்தார், அப்போது நடிகர் விஜய்க்கு வயது 18. அதையடுத்து மீண்டும் தந்தையின் இயக்கத்தில் வெளிவந்த ‘செந்தூர பாண்டி’ திரைப்படத்தில் நடித்தார், இயக்குனர் எஸ். ஏ.சந்திரசேகர் மீதுள்ள மரியாதை நிமித்தமாக நடிகர் விஜயகாந்த் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக செந்தூர பாண்டியாக நடித்தார். இதன் பின் தந்தையின் இயக்கத்தில் நடிகர் விஜய் அடுத்தடுத்து ‘ரசிகன்’, ‘தேவா’, ‘விஷ்னு’ ஆகிய திரைப்படங்களில் நடித்தார். பின் ‘இராஜாவின் பார்வையிலே’, , ‘சந்திரலேகா’, ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ ஆகிய திரைப்படங்களில் நடித்தார். ‘இராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில் நடிகர் அஜித் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

அப்போது நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் வெற்றி, தோல்வி என இரண்டையுமே சந்தித்த நிலையில் திரைத்துறையில் அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தான் 1996-ல் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த ‘பூவே உனக்காக’ என்ற திரைப்படம். இந்த திரைப்படம் 200 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி அவருக்கு பெரும் புகழை ஈட்டியதோடு பல குடும்பங்களையும் அவரின் ரசிகர்களாக மாற்றியது. இதன் பின் ‘வசந்த வாசல்’, ‘செல்வா’, ‘மாண்புமிகு மாணவன்’, ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’ என அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவந்த நிலையில் 1997-ல் வெளிவந்த ‘லவ் டூடே’ நடிகர் விஜய்க்கு இன்னுமொரு வெற்றியை ஈட்டியது. மேலும் நடிகர் சிவாஜி கணேசனுடன் இணைந்து ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தில் நடித்தார் நடிகர் விஜய், இந்த திரைப்படத்தில் தான் நடிகை சிம்ரன் முதன்முதலாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதை தொடர்ந்து நடிகர் சூர்யாவை திரைத்துறைக்கு அறிமுகம் செய்த ‘நேருக்கு நேர்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யாவோடு இணைந்து இன்னொரு நாயகனாக நடித்தார்.

அதன் பின் 1997-ல் இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில் ‘காதலுக்கு மரியாதை’ திரைப்படம் வெளிவந்தது. இந்த திரைப்படம் அவருக்கு இன்னொரு பெரிய வெற்றி படமாக அமைந்ததோடு நடிகர் விஜய்க்கு பல பெண் ரசிகைகளை கொண்டு சேர்த்தது. அது மட்டுமல்லாமல் காதலை எதிர்க்கும் பல பெற்றோருக்கும் காதலின் மீது ஒரு தனி மரியாதையை இந்த திரைப்படம் பெற்று கொடுத்தது. பின் ‘நினைத்தேன் வந்தாய்’, ‘நிலாவே வா’, ‘பிரியமுடன்’, ‘நெஞ்சினிலே’, ‘என்றென்றும் காதல்’, மின்சார கண்ணா’ என திரைப்படங்கள் வெளிவந்த நிலையில் நடிகர் விஜய்க்கு இன்னுமொரு பெரிய வெற்றியை 1999-ல் வெளிவந்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப்படம் பெற்று கொடுத்தது. இதன் பின் ‘கண்ணுக்குள் நிலவு’ திரைப்படத்தில் மீண்டும் நடிகை ஷாலினியுடன் ஜோடி சேர்ந்தார் நடிகர் விஜய்.

 

இந்நிலையில் 2000-ல் வெளிவந்த ‘குஷி’ திரைப்படம் நடிகர் விஜய்க்கு மெகா ஹிட்(200 நாட்கள்) வெற்றியை பெற்று தந்தது. ஒரு நவநாகரிக இளைஞனாக நடிப்பிலும் நடனத்திலும் நடிகர் விஜய் பலரையும் கவர்ந்தார். விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை ஜோதிகாவும் இந்த திரைப்படத்தில் தன் வித்தியாசமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். ‘குஷி’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்த அடுத்த மூன்று திரைப்படங்களும் அவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது. ‘பிரியமானவளே'(125 நாட்கள்), ‘பத்ரி'(100 நாட்கள்), ‘ஃப்ரெண்ட்ஸ்(200 நாட்கள்) ஆகிய திரைப்படங்கள் தான் அது. இதனால் தமிழ் சினிமாவின் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக நடிகர் விஜய் வலம் வந்தார். ‘ஃப்ரெண்ட்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிகர் சூர்யாவோடு மீண்டும் இணைந்து நடித்தார். மேலும் அந்த திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவுடன் நடித்த நகைச்சுவை காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின் ‘ஷாஜகான்’, ‘தமிழன்’, ‘யூத்’, ‘பகவதி’, ‘வசிகரா’, ‘புதிய கீதை’என வரிசையாக நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் வந்தன. இதனையடுத்து ‘திருமலை’, நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த ‘உதயா’ ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தது.

இந்நிலையில் 2004-ல் வெளிவந்த ‘கில்லி’ திரைப்படம் நடிகர் விஜய்க்கு பெரும் வெற்றி படமாக மெகா ஹிட்டானது. இந்த திரைப்படம் நடிகர் விஜய்யின் திரைத்துறை வாழ்க்கைக்கு மைல் கல்லாக அமைந்ததோடு அவரது ரசிகர் பட்டாளத்தை இன்னும் அதிகப்படுத்தியது. திரையுலகினர் மட்டுமல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் ‘கில்லி’ கொண்டாடப்பட்டது. நடிகர் பிராகாஷ் ராஜ் இந்த திரைப்படத்தில் காட்டிய வில்லத்தனம் அனைவரையும் ஈர்த்தது. இதன் பின் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘மதுர’ திரைப்படமும் அவரது ரசிகர்களை கவர்ந்தது.

அதன் பின் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘திருப்பாச்சி’ திரைப்படம் மீண்டும் ஒரு வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து வெளியான சச்சின் திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் நடிப்பு மற்றொரு வித்தியாசமான பரிமாணத்தில் இருந்தது. நடிகர் வடிவேலுடன் விஜய் இனைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றது. பின் தன் தந்தையின் இயக்கத்தில் ‘சுக்ரன்’ திரைப்படத்தில் நடித்தவர் மீண்டும் இயக்குனர் பேரரசு கூட்டணியில் உருவான ‘சிவகாசி’ திரைப்படத்தில் நடித்தார். ‘சிவகாசி’ திரைப்படமும் விஜயக்கு ஒரு வெற்றி படமாக அமைந்தது.

இருப்பினும் 2006-ல் வெளியான ‘ஆதி’ திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அந்த வருடத்தில் நடிகர் விஜய்க்கு வேறு திரைப்படங்கள் வெளிவரவில்லை. இந்த தோல்வியை சந்தித்த நடிகர் விஜய் துவண்டு போகவில்லை. தோல்வியை வெற்றி படிகளாக மாற்ற முயன்றார். இதையடுத்து 2007-ல் பிரபுதேவாவின் இயக்கத்தில் வெளியான ‘போக்கிரி’, மெகா ஹிட் வெற்றியை கொடுத்தது. மேலும் இந்த திரைப்படம் கேரளாவிலும் 100 நாட்கள் ஓடியதோடு அங்கும் நடிகர் விஜய்க்கு ரசிகர்களை உருவாக்கியது.

அதன்பின் வெளியான ‘அழகிய தமிழ்மகன்’, ‘குருவி’, ‘வில்லு’, ‘வேட்டைக்காரன்’ ஆகிய திரைப்படங்கள் நடிகர் விஜய்க்கு பிளாக்பிளஸ்டர் வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் ஓரளவுக்கு திரையரங்கில் ஓடியது. நடிகர் விஜய்யின் 50-வது திரைப்படமான ‘சுறா’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இருப்பினும் ‘அழகிய தமிழ்மகன்’ திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த அனைத்து பாடல்களும் வரவேற்பை பெற்றது, அதுமட்டுமின்றி நடிகர் விஜய் முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் இது. மேலும் ‘வில்லு’, ‘வேட்டைக்காரன்’, ‘சுறா’ ஆகிய திரைப்படங்களின் பாடல்களும் ஹிட் கொடுத்தது. ‘வில்லு’ திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவுடன் நடித்த நகைச்சுவை காட்சிகளும் மக்கள் மத்தியில் பேசப்பட்டது.

இதன்பின் நடிகர் விஜய் நடிப்பில் 2011-ல் வெளியான ‘காவலன்’ திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் விஜய் பழைய ‘காதலுக்கு மரியாதை’ விஜய்யை போல் அமைதியாக நடித்திருப்பார். மேலும் வடிவேலுவுடன் நடித்த காட்சிகளும் மீண்டும் ஹிட் கொடுத்தது. இதையடுத்து அதே வருடத்தில் வெளியான ‘வேலாயுதம்’ திரைப்படமும் வெற்றி பெற்றது.

பின் 2012-ல் ஷங்கர் இயக்கத்தில் ஜீவா, ஶ்ரீகாந்த், சத்யராஜ் ஆகியோருடன் விஜய் இணைந்து நடித்த ‘நண்பன்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. இந்த திரைப்படம் இந்தியில் அமிர் கான் நடிப்பில் உருவான ‘3 இடியட்ஸ்’ திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அதே வருடத்தில் தீபாவளிக்கு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படமும் மெகா ஹிட் ஆனது. ஒரே வருடத்தில் அவர் நடித்த இரண்டு திரைப்படங்களும் வசூல் சாதனை புரிந்து பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்தது. மேலும் ‘துப்பாக்கி’ திரைப்படத்தில் விஜய் தன் தோற்றத்தை மாற்றி ஸ்டைலான மாஸ் தோற்றத்தில் அனைவரையும் கவர்ந்தார்.

அதன் பின் 2013-ல் பெரும் தடைகளை தாண்டி ‘தலைவா’ திரைப்படம் வெளியானது. 2014-ல் கேரளாவின் உச்ச நடிகரான மோகன்லால் உடன் இனைந்து விஜய் நடித்த ‘ஜில்லா’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தது. அதே வருடத்தில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த ‘கத்தி’ திரைப்படம் மெகா ஹிட்டானது. இந்த திரைப்படம் விவசாயிகளின் பிரச்சினையை பேசி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் இழுத்தது. மேலும் இந்த திரைப்படத்தின் சண்டை காட்சிகள் அனைவரையும் கவர்ந்ததோடு திரைப்படத்தின் இறுதி கட்டத்தில் விஜய் பேசும் நீண்ட அரசியல் உரைகள் அனைவராலும் பேசப்பட்டது.

இந்நிலையில் 2015-ல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘புலி’ திரைப்படம் தோல்வியை தழுவியது. இருப்பினும் இந்த திரைப்படம் இன்று வரை பல குழந்தைகளால் கொண்டாடப்படும் திரைப்படமாக உள்ளது. இதையடுத்து அட்லி இயக்கிய ‘தெறி’ திரைப்படத்தில் விஜய் நடித்தார். இந்த திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதோடு பாடல்களும் ஹிட் அடித்தது. மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்ததோடு விஜய்யின் மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். அதன் பின் வெளிவந்த ‘பைரவா’ ஓரளவுக்கு வெற்றியை கொடுத்தது.

பின் 2017-ல் தீபாவளிக்கு அட்லியின் இயக்கத்தில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் மெகாஹிட் அடித்ததோடு அனைவராலும் பரவலாக பேசப்பட்டது. அரசியல் சர்ச்சைகள், ஜி.எஸ்.டி சர்ச்சைகள், மருத்துவம் இலவசமாக்க பட வேண்டிய முக்கியத்துவம் என இந்த திரைப்படத்தில் பேசப்பட்ட விஷயங்கள் அனைத்தும் இந்த திரைப்படத்தை எல்லோரும் பார்க்க தூண்டியது. ஒரு மருத்துவராக, மெஜிஷியனாக, கிராமத்து இளைஞராக என விஜய் மூன்று வேடங்களில் நடித்தது அனைவராலும் கொண்டாடப்பட்டது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் தமிழர்களின் வரவேற்பை பெற்றது.

மேலும் நடிகர் விஜய்யின் திரைப்படம் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பெறும் வரவேற்பை பெற்றது. நடிகர் விஜய்யின் தமிழ் திரைப்படங்கள் கோல்ட்மைன்ஸ் டெலிஃபிலிம்ஸ் மூலமாக இந்தி மொழிக்கு மாற்றம் செய்யப்படுகிறது. ஜுலை 2017-ல் விஜய் நடித்த திரைப்படங்களான ‘வேட்டைக்காரன்’ மற்றும் ‘ஜில்லா’ இந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ரிஷ்தே சினிபிலக்ஸ் என்ற இந்தி தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த ஒளிபரப்பின் போது #1 மற்றும் #3 ஆகிய இந்தி திரைப்பட தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளி தரவரிசைகளை ரிஷ்தே சினிபிலக்ஸ் சேனல் பிடித்தது. மேலும் ‘தெறி’ திரைப்படத்தின் இந்தி பதிப்பை ஒளிபரப்பு செய்த போது சோனி மேக்ஸ் சேனல் #5 இடத்தை பிடித்தது.

நடிகர் விஜய் நடிகராக மட்டுமல்லாமல் அவரின் பன்முக திறமையை வெளிப்படுத்தி இருந்ததும் அவர் திரைத்துறையில் வெற்றி பெற காரணம். விஜய்யின் தனித்திறமைகளில் முக்கிய பங்கு அவரது நடனத்தை சேரும். குழந்தைகள் அனைவரின் மனதிலும் விஜய் இடம் பிடித்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது அவரின் நடனமும் தான். அவரின் நடன திறமை பல நடன கலைஞர்களுக்கு பெறும் வியப்பை கொடுத்துள்ளது. நடனம் மட்டுமல்லாமல் அவர் பாடிய பாடல்களும் வரவேற்பை பெற்றது. ‘தொட்டபெட்டா ரோட்டு மேல’, ‘ஓ பேபி பேபி’, ‘தம்மடிக்குற ஸ்டைல பாத்து’, ‘தங்க நிறத்துக்கு தமிழ்நாட்ட’, ‘ஏ பாப்பா நீ கொஞ்சம்’, ‘கொக கோலா பிரவுனு கலரு டா’, ‘வாடி வாடி கைப்படாத சீடி’, ‘கூகுள் கூகுள்’, ‘வாங்கண்ணா வணக்கங்கணா’, ‘கண்டாங்கி கண்டாங்கி’, ‘செல்ஃபி புள்ள’, ‘பாப்பா பாப்பா’, போன்ற பாடல்கள் ஹிட் அடித்து அவரின் திறமையை வெளிப்படுத்தியது.

நடிகர் விஜய் இந்த இடத்தை பிடிப்பதற்கு பல வெற்றிகள், தோல்விகள், அவமானங்கள், எதிர்ப்புகள் என அனைத்தையும் சந்தித்து உள்ளார். தோல்வியை கண்டு துவண்டு போகாமல் அதிலிருந்து பாடம் கற்று பின் வெற்றி பெற்றதோடு தனக்கென
திரைத்துறையில் ஒரு நிரந்தரமான இடத்தை பிடித்தார். தன் பன்முக திறமையினால் மக்கள் மனதையும் வென்றார்.

தற்போது தீபாவளிக்கு வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘சர்கார்’ திரைப்படம் பலரது பாராட்டுகளை பெற்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்கார் திரைப்படம் வெளியான நாளில் இருந்து திரைப்படத்திற்கு பல எதிப்புகள் வந்த வண்ணம் இருந்தது. தமிழக அரசு கொடுத்த இலவசப் பொருட்களை எரிப்பது போன்ற காட்சியும் அந்த இலவசப் பொருட்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் இருப்பது போன்ற காட்சியும் திரைப்படத்தில் இடம்பெற்றது. மேலும் ஜெயலலிதா அவர்களின் இயற்பெயர் படத்தில் வரும் வில்லி பாத்திரத்துக்கு சூட்டப்பட்டிருந்தது. இதனால் கோபமடைந்த அ.தி.மு.க. அமைச்சர்கள் இது தமிழக அரசின் இலவசத் திட்டங்களுக்கு எதிராக போராடத் தூண்டும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினர். மேலும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் சட்ட நடவடிக்கைகளை படக்குழுவினர் எதிர்கொள்ள வேண்டும் என எச்சரித்தார். இந்நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டு படத்தை திரையிடக் கோரி மதுரையில் அதிமுகவினர் நடத்திய போராட்டம் கோவை, சென்னை என விரிவடைந்து அனைத்து இடங்களிலும் நடிகர் விஜய்யின் பேனர்கள் கிழிக்கப்பட்டன. இதையடுத்து சர்கார் திரைப்படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டது. இதையடுத்து டிவிட்டரில் ‘#SarkarPuratchiArambam’ என்ற ஹேஷ்டாக் டாப் டிரெண்டிங் ஆகி முதல் இடத்திற்கு வந்தது. நடிகர் விஜய் ரசிகர்கள் பலரும் திரைப்படத்திற்கும் நடிகர் விஜய்க்கும் ஆதரவு தெரிவித்தனர். ஏற்கனவே தணிக்கை குழுவிற்கு சென்ற திரைப்படத்தை மீண்டும் தணிக்கை குழுவிற்கு அனுப்ப கூறியதற்கும் நடிகர் விஜய்யின் பேனரை கிழித்ததற்கு கடும் கண்டனங்களை ட்விட்டரில் தெரிவித்தனர். தமிழகம் மட்டும் அல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடாகாவை சேர்ந்த விஜய் ரசிகர்களும் வெளிநாடுகளில் வசிக்கும் ரசிகர்களும் தங்கள் கருத்துக்களை டிவிட்டரில் இந்த ஹேஷ்டாக் மூலம் தெரிவித்தனர். திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சியை டிவிட்டரில் பதிவிட்டு இந்த காட்சியை திரையரங்கில் இருந்து நீக்கினாலும் டிவிட்டரை விட்டு நீக்க முடியாது எனப் பதிவிட்டு கல்வியும் மருத்துவமும் தான் இந்த நாட்டிற்கு இலவசமாக வேண்டுமே தவிர மிக்ஸியூம் கிரைண்டரும் இல்லை என கருத்து தெரிவித்தனர்.

சர்கார் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 63-வது திரைப்படத்தை அட்லி இயக்குகிறார். நடிகர் விஜய் நடிக்கும் இந்த 63-வது திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் ஏ.ஆர்.ரகுமான் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இந்த திரைப்படம் அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படம் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு கோடிட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 63-வது திரைப்படம் அரசியல் படமா அல்லது கமர்ஷியல் படமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நடிகர் விஜய்யின் இந்த திரைப்படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைய வாழ்த்துகிறோம்.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: Celebrities

DON'T MISS