பாடலுக்கு வசூலிக்கும் ராயல்டியில் இளையராஜாவிடம் பங்கு கேட்கும் தயாரிப்பாளர்


இசையமைப்பாளர் இளையராஜா இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் 1976-ல் வெளிவந்த ‘அன்னக்கிளி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். தமிழ், தெலுங்கு, மளையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் 1000-க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக நாட்டுபுற இசை, கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் இவர் புலமை பெற்றவர். இவர் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை 4 முறை பெற்றதோடு திரைப்படங்களுக்கான பிண்ணனி இசையமைப்புக்கும் புகழ் பெற்றவர். இவர் இசையமைத்த புகழ்பெற்ற திரைப்பட பாடல்கள் இசைக்கலைஞர்களால் பல மேடைகளில் பாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இளையராஜா கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதி கானொளி ஒன்றை வெளியிட்டார். அந்த கானொளியில் தன் பாடல்களை பாடுவதற்கு முன் முறையான அனுமதி பெற வேண்டும் என்றும் தன் பாடல்களை பணம் வாங்கிக்கொண்டு மேடைகளில் பாடுபவர்கள் அதற்குண்டான ராயல்டி தொகையை தென்னிந்திய இசைக் கலைஞர் சங்கத்தில் செலுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.

மேலும் முன் அனுமதியின்றி தன் பாடல்களை பாடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். இசையமைப்பாளர் இளையராஜா தன் பாடல்களுக்கு ராயல்டி கேட்டது தொடர்பாக ஆதரவும் விமர்சனமும் எழுந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ் திரைப்பட பாதுகாப்பு குழு தலைவரும், தயாரிப்பாளருமான கே.ராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“இசையால் தமிழ் சினிமாவை நிரப்பிக் கொண்டிருக்கும் இளையராஜா மீது நான் பற்று கொண்டவன். ஒரு படத்தின் இசை உரிமை என்பது யாரை சேரும் என்பது எப்படி முடிவு செய்கிறார்கள் என தெரியவில்லை. சினிமாவை பொறுத்தவரை ஒரு பாடல் உருவாக இசையமைப்பாளரும், தயாரிப்பாளரும் காரணம். இசையமைப்பாளர் தாயாக இருந்தால் அந்த பாடல் உருவாக பணம் தருபவர் தந்தையல்லவா? அதெப்படி ஒரு பாடலின் ராயல்டி என்பது இசையமைப்பாளரை மட்டும் சென்றடைகிறது? தயாரிப்பாளருக்கும் கிடைத்திருக்க வேண்டுமே? அப்பாவி தயாரிப்பாளர்களுக்கு பணம் போட மட்டும் தான் தெரிகிறது. நீங்கள் உரிமையைப் போராடி பெற்றுள்ளீர்கள். ஆனால் இதில் தயாரிப்பாளர்களுக்கும் உரிமை உள்ளது. இசையமைப்பாளர் ராயல்டி பெற்று தயாரிப்பாளருக்கு தர வேண்டுமா? அல்லது தயாரிப்பாளர்களுக்கென்று தனியாக ராயல்டி பெறும் உரிமை இருக்கிறதா? எப்படி இந்த ராயல்டி முறை வகுக்கப்பட்டுள்ளது? ஏன் இது தயாரிப்பாளர்களுக்கு வருவதில்லை? என்ற கேள்விகளை கேட்க வேண்டும். யாரிடம் கேட்பது என தெரியாததால் உங்களிடம் கேட்கிறேன்…

எங்களுக்கும் சேர வேண்டிய ராயல்டியை நீங்கள் தனியாகப் பெற்றிருப்பதால் உங்களிடம் கேட்கிறேன். ஒரு பாடல், பின்னணி இசை உருவாகக் காரணமான பணத்தை முழுமையாக நாங்கள் செலுத்துகிறோம். எங்களுக்கு ஏன் அந்த ராயல்டி உரிமை இல்லை? இப்போதாவது எங்களுக்கு அந்த உரிமையை பங்கிட்டுத்தர வாதாடுங்கள். அல்லது எப்படிப் பெறுவது என்ற வழிகாட்டலையாவது முன்னின்று செய்யலாமே? தாங்கள் பெறும் ராயல்டியில் குறிப்பிட்ட சதவீதம் அந்தந்த தயாரிப்பாளர்களுக்கு என் மூலம் தரப்படும். அல்லது அந்தந்த இசையமைப்பாளர்கள் தருவார்கள் என அறிவிக்கலாமே? இதில் ஏதாவது ஒன்றை இளையராஜாவிடம் இருந்து பதிலாகப் பெற காத்திருக்கிறேன்.” இவ்வாறு தமிழ் திரைப்பட பாதுகாப்பு குழு தலைவரும், தயாரிப்பாளருமான கே.ராஜன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: Entertainment

DON'T MISS