இன்று திரையுலகில் கோலோச்சிய நடிகையர் திலகத்தின் பிறந்தநாள்


1950 மற்றும் 1960-களில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகை தன் சிறந்த நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்து நடிகையர் திலகமாக கோலோச்சியவர் நடிகை சாவித்திரி. கதாநாயகர்களுக்கு இணையாக பேசப்பட்டு புகழின் உச்சிக்கு சென்று தன் சம்பாத்தியத்தில் பங்களாக்கள், கார்கள், நகைகள் என வாங்கிக் குவித்தவர் தன் எதிர்காலத்தில் அனைத்தையும் இழந்தார். தெலுங்கு திரையுலகில் இன்றும் கதாநாயகர்களுக்கு நிகரான மரியாதையுடன் அனுகப்படுபவர் நடிகை சாவித்திரி. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த சாவித்திரிக்கு நடிப்பின் மீது தீராத ஆசை. அந்த ஆசையால் சென்னை வந்த சாவித்திரிக்கு அவரின் ஆசை உடனே நிறைவேறவில்லை. ஜெமினி ஸ்டூடியோவின் நிர்வாகி ஒருவரால் புகைப்படம் எடுக்கப்பட்டடு அந்த புகைப்படம் பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்தது. பின்னாளில் புகைப்படம் எடுத்த நபரான ஜெமினி கணேசனையே சாவித்திரி திருமணம் செய்து கொண்டது இருவருமே எதிர்பாராத ஒன்று. “நீயேல்லாம் ஏன் நடிக்க வந்த, உனக்கு நடிப்பு வராது” என இயக்குனர் ஒருவர் சொன்ன நிலையில் அதை நினைத்து வருத்தப்பட்ட நடிகை சாவித்திரிக்கு பின்னாளில் தான் ஒரு நடிகையர் திலகமாக வலம் வரப்போவது தெரியாது. பாதாள பைரவி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் வாய்ப்பு உட்பட கிடைத்ததெல்லாம் சிறு சிறு வேடங்கள்.

இந்நிலையில் எல்.வி. பிரசாத் இயக்கிய ஒரு படத்திற்கு இரண்டாம் கதாநாயகி வேடம் தரப்பட, அதை ஏற்றுக்கொண்ட சாவித்திரிக்கு படத்தின் முதல் நாயகியால் பெரும் வாய்ப்பு கிடைத்தது. திரைப்படம் எடுக்க ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே இயக்குனருக்கும் முதல் கதாநாயகிக்கும் மனக்கசப்பு ஏற்பட இயக்குனர் இரண்டாம் கதாநாயகியான சாவித்திரியை முதல் நாயகியாக ஆக்கினார். எல்.வி.பிரசாத்தின் இந்த முடிவை எதிர்பாராத திரைப்பட குழுவினர் பலரும் இயக்குனர் அவரசப்பட்டு இந்த முடிவை எடுத்ததாக கருதினர். இருப்பினும் எல்.வி. பிரசாத் தன் முடிவில் உறுதியாக இருந்தார். இந்நிலையில் ‘மிஸ்ஸியம்மா’ என பெயரிடப்பட்ட அந்த திரைப்படம் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது.’மிஸ்ஸியம்மா’ திரைப்படத்தில் காதல், குறும்பு, கோபம், தாபம் என அத்தனை உணர்ச்சிகளையும் சிறப்பாக வெளிபடுத்தி எல்.வி. பிரசாத் முதல் நடிகையிடமிருந்து எதிர்பார்த்ததை விட சிறப்பான நடிப்பை நடிகை சாவித்திரி வெளிபடுத்தி இருப்பார். ‘மிஸ்ஸியம்மா’ திரைப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு ஒரே நாளில் புகழின் உச்சிக்கு போனார் நடிகை சாவித்திரி. பின் அடுத்த 20 வருடங்கள் அவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் வந்தவண்ணம் இருந்தது. ‘மிஸ்ஸியம்மா’ திரைப்படம் சாவித்திரியின் திரையுலக வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் ‘மிஸ்ஸியம்மா’ திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே திரைப்படத்தின் நாயகன் ஜெமினி கணேசனை காதலித்து வந்த நடிகை சாவித்திரி அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார் . ஜெமினி கணேசன் ஏற்கனவே திருமணமானவர் என்பதால் நடிகை சாவித்திரியின் குடும்பத்தில் இந்த விஷயம் பூதாகரமாக வெடித்தது. இதன் பின் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர்.

‘மிஸ்ஸியம்மா’ திரைப்படம் தந்த புகழால் அடுத்தடுத்து திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் நடிகை சாவித்திரி. தமிழில் நடிகர்கள் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். மற்றும் தெலுங்கில் என்.டி.ஆர், நாகேஷ்வரராவ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் சாவித்திரி. திரையுலகில் இருக்கும் பல முன்னணி கதாநாயகர்கள் நடிகை சாவித்திரியை தங்கள் திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்யுமாறு தயாரிப்பாளர்களிடம் கேட்கும் அளவுக்கு சாவித்திரியின் திரையுலக வாழ்க்கை வெற்றிகரமாக சென்று கொண்டிருந்தது. இதற்கிடையில் நடிகை சாவித்திரிக்கு 2 குழந்தைகள் பிறந்தது. பணம், புகழ், வெற்றி என நன்றாக சென்று கொண்டிருந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கையில் புயல் மதுவின் வடிவில் வீசத் தொடங்கியது.

இந்நிலையில் புகழின் உச்சியில் இருந்த நடிகை சாவித்திரியிடம் அவரின் நெருங்கிய தோழிகள் “உன் திறமைக்கு நீயே திரைப்படத்தை தயாரித்து இயக்கலாமே” என அவருக்கு ஆலோசனை தர ஏற்கனவே சாவித்திரிக்கு அந்த ஆசை இருந்ததால் அதற்கு அவர் ஒப்புக்கொண்டார். ஜெமினி கணேசனின் நண்பர் 2 திரைப்படங்களை தயாரிக்க அந்த 2 திரைப்படங்களையும் நடிகை சாவித்திரி இயக்கினார். 2 திரைப்படங்களுமே தொடர்ந்து வெற்றி பெற்றது. இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் தயாரிப்பில் சிக்கல் வந்ததால் படங்களை தானே தயாரிக்க ஆரம்பித்தார் சாவித்திரி. இதனிடையே திரைப்படம் தயாரிக்க வேண்டாம் என அறிவுறுத்திய ஜெமினி கணேசனுக்கும் சாவித்திரிக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டது. மேலும் ஜெமினி கணேசன் இன்னொரு பெண்ணை மணந்ததாகவும் அதுவும் பிரிவுக்கு ஒரு காரணம் எனவும் கூறப்பட்டு வந்தது. சேர்ந்து வாழ்கிறார்களா பிரிந்து வாழ்கிறார்களா என ஊடகங்கள் குழப்பமடையும் அளவுக்கு இருவருக்கும் இடையில் பிரச்சினை இருந்தது. குழந்தைகளைப் பார்க்க மட்டுமே ஜெமினி, சாவித்திரியின் வீட்டுக்கு வந்துபோய்கொண்டிருக்கிறார் என பத்திரிகைகள் பரபரப்பாய் எழுதிக்கொண்டிருந்தன.

இந்நிலையில் நடிகை சாவித்திரி தயாரித்த திரைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தோல்வியை தழுவியது. தொடர் தோல்வி, காதல் கணவரின் பிரிவு, பண நஷ்டம் இவற்றால் நிம்மதியிழந்த சாவித்திரி எப்போதோ அறிமுகமான மதுவை நாட ஆரம்பித்தார். இதனால் அவரின் உடல்நிலை சீர்கெட்டது. போதாக்குறைக்கு வருமானவரிப் பிரச்சினையால் தி.நகர் அபிபுல்லா சாலையில் பார்த்துப் பார்த்து தான் கட்டிய வீடு ஜப்தி செய்யப்பட்டது. இந்நிலையில் அடுத்தடுத்த அதிர்ச்சிகள் நடிகை சாவித்திரியை நிரந்தரமாக போதையின் பிடிக்கு தள்ளியது. இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் கண்முன்னே நிற்க சுதாரித்து கொண்ட நடிகை சாவித்திரி தன் உறவுக்காரர் ஒருவரின் மகனுக்கு தன் மகளை திருமணம் செய்து வைத்தார். இருப்பினும் மகனின் எதிர்காலம் கண் முன் நிற்க முன்னணி கதாநாயகர்களுக்கு இணையாக பேசப்பட்ட நடிகை சாவித்திரி சிறுசிறுவேடங்கள் என எந்த வாய்ப்பையும் விடாமல் நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

கார்கள், பங்களாக்கள், கணக்கிடமுடியாத நகைகள் என செல்வ செழிப்போடு வாழ்ந்த நடிகை சாவித்திரி வாடகை வீட்டில் வசித்து வந்தார். மேலும் நடிகை சாவித்திரிக்கு சர்க்கரை நோயின் தாக்கத்தால் அவ்வப்போது உடல்உபாதைகள் வேறு படுத்திக்கொண்டிருந்தது. எவ்வித ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கேட்கும் நிலையில் நடிகை சாவித்திரி அப்போது இல்லை. அவரது நோக்கமெல்லாம் தன் மகனின் எதிர்காலம் தான். இந்நிலையில் 1980-ல் ஒருநாள் படப்பிடிப்பிற்காக மகனுடன் மைசூர் சென்ற நடிகை சாவித்திரி சர்க்கரை நோய் பாதிப்பிலும் நிம்மதி தேட மதுவை அருந்தினார். ஆனால் அதுவே அவருடைய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைந்தது. மயக்கமாகி கோமா நிலைக்கு போன நடிகை சாவித்திரி 18 மாதங்கள் கோமா நிலையில் இருந்தவாறு 1981-ம் வருடம் டிசம்பர் மாதம் 26-ம் தேதி உயிரை விட்டார் நடிகை சாவித்திரி. தன்னை தேடி வந்தவருக்கு உதவும் கருணை உள்ளம், கணவன் மீதான அதீத பாசம், எவரையும் எளிதில் நம்பும் சுபாவம் உள்ளிட்ட குணங்கள் ஒரு மாபெரும் நடிகையை எளிதில் வீழ்த்தியது. யார் தேடி வந்தாலும் அவருக்கு உதவும் குணத்தை கொண்ட நடிகை சாவித்திரியின் முடிவு பலரையும் வேதனையில் ஆழ்த்தியது. அவருடைய பிறந்தநாளான இன்று அவர் இவ்வுலகில் இல்லை என்றாலும் அவரது அற்புதமான நடிப்பில் வெளியான திரைப்படங்கள் நடிகையர் திலகம் சாவித்திரியை என்றும் நமக்கு நினைவுபடுத்தி கொண்டே இருக்கும்.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: Entertainment

DON'T MISS