தன் பாடல்களின் மூலம் பலரையும் கவர்ந்த இசைக்குயில் ஸ்வர்ணலதாவின் நினைவலைகள்


0
1 share

90-களின் காலக்கட்டத்தில் இந்திய சினிமாவில் பலராலும் உச்சரிக்கப்பட்ட பெயர் ஸ்வர்ணலதா. எத்தனையோ பாடகர்கள் இசை உலகில் வந்து சென்றாலும் ஸ்வர்ணலதாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அதற்கு முக்கிய காரணம் தனித்துவம் வாய்ந்த அவரின் குரல் வளம் என்று கூறலாம்.

அவர் பாடிய பாடலை கேட்ட இரண்டே நொடிகளில் இது ஸ்வர்ணலதாவின் குரல் என அடையாளம் காண முடியும். அந்த குரல் வழியே வரும் பாடலை எங்கு கேட்டாலும் நின்று அந்த பாடலை கேட்டு விட்டு தான் கடந்து செல்ல முடியும். ‘போவோமா ஊர்கோலம்’ என நம்மையும் அழைத்து சென்றவர் ‘போராளே பொன்னுத்தாயி’ என்ற பாடலின் மூலம் நம்மை கலங்க வைத்தார். இன்னும் பல பாடல்களை கூறலாம். பல ஆயிரக்கணக்கான பாடல்களால் தென்னிந்திய இசை ரசிகர்களை கட்டி போட்டது இந்த இசைக்குயிலின் குரல்.

ஸ்வர்ணலதாவை அனைவரும் கொண்டாடியதற்கு அவரின் உச்சரிப்பும் ஒரு காரணமாக அமைந்தது. அவரின் பாடல்களை கேட்ட நமக்கு அவரின் தாய்மொழி தமிழ் மொழியாக இருக்குமோ என்ற சந்தேகம் நிச்சயம் எழும். அப்படியொரு தெளிவான உச்சரிப்பு. குறிப்பாக தெம்மாங்கு பாடல்களில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிகரான அந்த உச்சரிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

1973-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி பாலக்காட்டில் பிறந்த ஸ்வர்ணலதாவின் குடும்பமே இசைக்குடும்பம் தான். திரையுலகில் பிண்ணனி பாடகியாக வேண்டும் என சென்னை வந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் வாய்ப்பு கேட்டார். “எங்கே பாடு?” என்று மெல்லிசை மன்னர் கூறியதும் ‘உயர்ந்த மனிதன்’ திரைப்படத்தில் வரும் ‘பால் போலவே…’ என்ற பாடலை பாடினார். அந்த உச்சரிப்பு, தனித்துவம் வாய்ந்த குரல், அந்த குரலின் குழைவு என எல்லாமே மெல்லிசை மன்னருக்கு பிடித்து போக தான் இசையமைக்கும் ‘நீதிக்கு தண்டனை’ என்ற திரைப்படத்தில் பாட வாய்ப்பு தந்தார்.

மகாகவி பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ என்ற பாடல்தான் ஸ்வர்ணலதாவுக்கு முதல் பாடல். அந்த பாடலை பாடிய ஸ்வர்ணலதாவுக்கு அப்போது வயது 14 தான். அதைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் இசையில் தொடர்ந்து பாடினார் ஸ்வர்ணலதா.

“போவேமா ஊர்கோலம்”, “நீ எங்கே என் அன்பே”, “குயில் பாட்டு” என மெலடி பாடல்களை தொடர்ந்து பாடிக்கொண்டிருந்த நிலையில் ‘கேப்டன் பிராபாகரன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடல் முற்றிலும் மாறுபட்டது. எந்த வகையான பாடலாக இருந்தாலும் ஸ்வர்ணலதாவால் அத்தனை எளிதில் பாட முடிந்தது. “ராக்கம்மா கைய தட்டு” என்ற பாடலை பாடாதவர்களே இல்லை, முக்கியமாக ‘சத்ரியன்’ திரைப்படத்தில் இடம்பெறும் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’ என்ற பாடல் காதல் வயப்பட்ட ஒரு பெண்ணின் மனதை ஸ்வர்ணலதாவின் குரல் வழியே அழகாக பிரதிபலித்தது. இளையராஜாவின் இசையில் எத்தனையோ பாடல்களை பாடினாலும் “என்னுள்ளே என்னுள்ளே” பாடல் ஸ்வர்ணலதாவுக்கு இசைத்துறையில் பெரும் புகழை கொடுத்தது. “மெய்சிலிர்க்கும் வண்ணம் நீ வளர்த்ததென்ன” என உச்சஸ்தாயில் அவர் பாடும் போது அந்த பாடல் நம்மை வேறெங்கோ கொண்டு செல்லும்.

அதன் பின் ஏ.ஆர். ரஹ்மானுடனான ஸ்வர்ணலதாவின் இசைப்பயணம் இந்திய சினிமாவுக்கு இன்னும் பல காலத்தால் அழியாத பாடல்களை கொடுத்தது. ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தில் ‘உசிலம்பட்டி பெண்குட்டி’ பாடல் தான் இந்த கூட்டணியில் அமைந்த முதல் பாடல். ஸ்வர்ணலதாவின் இசைத் திறமையை ஏ.ஆர்.ரஹ்மான் நன்றாக பயன்படுத்தி கொண்டார் என கூறும் அளவுக்கு பல பாடல்கள் ஹிட்டடித்தது.

“முக்காலா முக்காபுலா”, “குச்சி குச்சி ராக்கம்மா”, “மெட்ராஸ சுத்திப் பாக்கப் போறேன்”, “ராக்கோழி” என ஹிட் ரகங்கள். ஸ்வர்ணலதாவுக்கு “ஹம்மிங் குயின்” என பெயர் வாங்கி கொடுத்தது ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் தான். அந்தளவுக்கு ஹம்மிங்குகளால் நம்மை கட்டி போட்டார் ஸ்வர்ணலதா. ரஹ்மான் ஸ்வர்ணலதாவின் ஹம்மிங்குகளால் கிராமிய படமான ‘கிழக்கு சீமையிலே’ திரைப்படம் நெடுக நிரப்பி இருப்பார்.

ரஹ்மானின் ஆஸ்தான பாடகியாக மாறியிருந்த ஸ்வர்ணலதாவுக்கு “கருத்தம்மா” படத்தின் “போராளே பொன்னுத்தாயி” பாடல் அவரின் 21 வயதில் தேசிய விருதை பெற்றுத் தந்தது. காதல், மகிழ்ச்சி என பல உணர்வுகளை தன் பாடல்கள் வழியே வெளிப்படுத்தும் ஸ்வர்ணலதா “போராளே பொன்னுத்தாயி” பாடலில் வெளிப்படுத்தும் சோகம், வலி அனைவரையும் கலங்க வைக்கும். பாடலை பாடி முடித்த ஸ்வர்ணலதாவும் கண் கலங்கி போனார். அதே சோகத்தை “எவனோ ஒருவன் வாசிக்கிறான்” பாடலிலும் வெளிப்படுத்தி இருப்பார். “இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்” என அந்த வரிகளை இப்போது கேட்டும் போது அந்த இசைக்குயில் இப்போது இந்த உலகில் இல்லையே என நம்மை துயரத்தில் ஆழ்த்தும்.

இளையராஜா, ரஹ்மான் மட்டுமல்லாமல் தேவா, எஸ்.ஏ.ராஜாகுமார் ஆகியோருக்கும் இவர் ஆஸ்தான பாடகி. யுவன், கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், சிற்பி என பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார் ஸ்வர்ணலதா. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மளையாளம், உருது, பெங்காலி, ஒரியா, பஞ்சாபி என பல மொழிகளில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். இத்தனை மொழிகளில் அவர் பாடிய போது பலர் வியப்படைந்தாலும் ஸ்வர்ணலதாவுக்கு எந்த மொழியாக இருந்தாலும் கடினமாக இல்லை. ரஹ்மானின் முதல் இந்தி திரைப்படமான “ரங்கீலா” படத்தில் “ஹை ராமா” பாடல் வரிகளை கூர்ந்து கவனித்தால் தெரியும் ஸ்வர்ணலதாவுக்கு வேற்று மொழிகள் கடினமல்ல என்று.

பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி புகழின் உச்சிக்கு சென்ற ஸ்வர்ணலதா தன் 37 வயதிலேயே இவ்வுலகை விட்டுச் சென்றுவிட்டார். இந்த இசைக்குயில் இவ்வுலகில் இப்போது இல்லை என்றாலும் அவர் மறைந்து விட்டார் என்று யாராலும் கூற முடியாது. தான் பாடிய பாடல்களின் வழியே இன்னும் இந்த இசைக்குயில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். இசைக்கு ஏது மறைவு? இசை உள்ள காலம் வரை இந்த இசைக்குயிலும் வாழ்ந்து கொண்டிருப்பார். இந்த இசைக்குயிலின் பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாடல்களை கமெண்ட் செய்யுங்கள்.


Like it? Share with your friends!

0
1 share

What's Your Reaction?

Angry Angry
0
Angry
Cute Cute
0
Cute
WTF WTF
0
WTF
Love Love
2
Love

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format