சர்கார் திரைப்படத்தில் நீக்கப்பட்ட 5 நொடிக்காட்சி – தணிக்கைத்துறை சான்றிதழில் தகவல்


சர்கார் திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்த தகவல் தணிக்கை குழு சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் சர்கார் திரைப்படம் வெளியானதை அடுத்து திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது. தமிழக அரசு கொடுத்த இலவசப் பொருட்களை எரிப்பது போன்ற காட்சியும் அந்த இலவசப் பொருட்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் இருப்பது போன்ற காட்சியும் திரைப்படத்தில் இடம்பெற்றது. மேலும் ஜெயலலிதா அவர்களின் இயற்பெயர் படத்தில் வரும் வில்லி பாத்திரத்துக்கு சூட்டப்பட்டிருந்தது.

இதனால் கோபமடைந்த அ.தி.மு.க. அமைச்சர்கள் இது தமிழக அரசின் இலவசத் திட்டங்களுக்கு எதிராக போராடத் தூண்டும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினர். மேலும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் சட்ட நடவடிக்கைகளை படக்குழுவினர் எதிர்கொள்ள வேண்டும் என எச்சரித்தார்

இந்நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டு படத்தை திரையிடக் கோரி மதுரையில் அதிமுகவினர் நடத்திய போராட்டம் கோவை, சென்னை என விரிவடைந்து அனைத்து இடங்களிலும் நடிகர் விஜய்யின் பேனர்கள் கிழிக்கப்பட்டன.

இதையடுத்து சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொண்டது. தணிக்கை குழு அனுமதியுடன் எந்த காட்சிகளை நீக்க வேண்டும் என முடிவு செய்து நீக்கப்பட்ட காட்சிகளை தவிர்த்து படத்தை திரையிடுவோம் என படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்த தகவல் தணிக்கை சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவசங்களை தீயிட்டு எரிக்கும் 5 வினாடிகள் காட்சி மறு தணிக்கையில் நீக்கப்பட்டதாகவும் திரைப்படத்தில் இடம்பெறும் ‘கோமளவல்லி’ என்று அழைக்கும் வசனங்கள் மியூட் செய்யப்பட்டதாகவும் தணிக்கை குழு சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டெங்கு கொசு பற்றி நடிகர் விஜய் பேசும் ‘பொதுப்பணித்துறை’ என்ற வார்த்தையும் மியூட் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட காட்சிகளில் வரும் சப் டைட்டிலும் நீக்கப்பட்டுள்ளதாக சான்றிதழில் தெரிவிக்கப்பட்டு மத்திய தணிக்கைத்துறை அலுவலர் லீலா மீனாட்சி கையொப்பமிட்டுள்ளார்.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: Entertainment

DON'T MISS