சர்கார் திரைப்படத்திற்கு ஆதரவாக டிவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டாக்


இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் சர்கார். வெளியான நாளில் இருந்து இந்த திரைப்படத்திற்கு பல எதிப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

தமிழக அரசு கொடுத்த இலவசப் பொருட்களை எரிப்பது போன்ற காட்சியும் அந்த இலவசப் பொருட்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் இருப்பது போன்ற காட்சியும் திரைப்படத்தில் இடம்பெற்றது. மேலும் ஜெயலலிதா அவர்களின் இயற்பெயர் படத்தில் வரும் வில்லி பாத்திரத்துக்கு சூட்டப்பட்டிருந்தது.

இதனால் கோபமடைந்த அ.தி.மு.க. அமைச்சர்கள் இது தமிழக அரசின் இலவசத் திட்டங்களுக்கு எதிராக போராடத் தூண்டும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினர். மேலும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் சட்ட நடவடிக்கைகளை படக்குழுவினர் எதிர்கொள்ள வேண்டும் என எச்சரித்தார்

இந்நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டு படத்தை திரையிடக் கோரி மதுரையில் அதிமுகவினர் நடத்திய போராட்டம் கோவை, சென்னை என விரிவடைந்து அனைத்து இடங்களிலும் நடிகர் விஜய்யின் பேனர்கள் கிழிக்கப்பட்டன. இதையடுத்து சர்கார் திரைப்படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது.

தற்போது டிவிட்டரில் ‘#SarkarPuratchiArambam’ என்ற ஹேஷ்டாக் டாப் டிரெண்டிங் ஆகி முதல் இடத்தில் உள்ளது. நடிகர் விஜய் ரசிகர்கள் பலரும் திரைப்படத்திற்கும் நடிகர் விஜய்க்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தணிக்கை குழுவிற்கு சென்ற திரைப்படத்தை மீண்டும் தணிக்கை குழுவிற்கு அனுப்ப கூறியதற்கும் நடிகர் விஜய்யின் பேனரை கிழித்ததற்கு கடும் கண்டனங்களை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர். மேலும் நாட்டில் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் மட்டும் அல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடாகாவை சேர்ந்த விஜய் ரசிகர்களும் வெளிநாடுகளில் வசிக்கும் ரசிகர்களும் தங்கள் கருத்துக்களை டிவிட்டரில் இந்த ஹேஷ்டாக் மூலம் தெரிவித்து வருகின்றனர். திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சியை டிவிட்டரில் பதிவிட்டு இந்த காட்சியை திரையரங்கில் இருந்து நீக்கினாலும் டிவிட்டரை விட்டு நீக்க முடியாது எனப் பதிவிட்டு வருகின்றனர். மேலும் கல்வியும் மருத்துவமும் தான் இந்த நாட்டிற்கு இலவசமாக வேண்டுமே தவிர மிக்ஸியூம் கிரைண்டரும் இல்லை என பதிவிட்டுள்ளனர். சர்கார் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகை சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: Entertainment

DON'T MISS