மனிதி #7 : பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் 48 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய இசையரசி எஸ்.ஜானகி


0
1 share

இசையை ரசிக்காதவர்கள் இவ்வுலகில் இருப்பது அரிது. நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் இசை பெரும் பங்காற்றுகிறது. நாம் எந்த மனநிலையில் இருந்தாலும் அதற்கேற்ற பாடலை கேட்டு அதில் லயித்து இருப்போம். அப்படி இசையை நேசிக்கும் பலருக்கு மிகவும் பிடித்த ஒரு பாடகி எஸ்.ஜானகி. ஒவ்வொரு திரைப்படத்திலும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காகவே பாடல்கள் இடம்பெறுகின்றன. அப்படி அந்த உணர்வுகளை நமக்கு உணர்த்தி நம்மையும் அந்த பாடலோடு ஒன்ற வைப்பவர் எஸ்.ஜானகி. அவர் பாட ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை இந்திய திரையுலகமும் இசை உலகமும் அவரை கொண்டாடி வருகிறது.

60 ஆண்டுகளாக இசைத் துறையில் ஜொலிக்கும் இசையரசி எஸ்.ஜானகி பாடிய பாடல்களில் பிடித்த பாடல் எது என்று கேட்டால் நாம் நிச்சயம் தடுமாறுவோம். செந்தூரப் பூவே…., அழகிய கண்ணே…., சின்ன தாயவள்…, அன்னக்கிளி உன்ன தேடுது…., ஊருசனம் தூங்கிடுச்சு…., காற்றில் எந்தன் கீதம்…. இன்னும் எத்தனை பாடல்களை கூறுவது? அவர் பாடிய ஒவ்வொரு பாடலுமே நிச்சயம் நமக்கு நெருக்கானமவை. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றிலும் ஒலித்த இவரது குரல் பலரது மனதையும் வருடியது.

ஆந்திர மாநிலம் பள்ளப்பட்டி கிராமத்தில் பிறந்தவர் பாடகி எஸ்.ஜானகி. இவரின் தந்தை ஆசிரியராக இருந்தாலும் ஜானகிக்கு கல்வியில் பெரியளவில் நாட்டம் இல்லை. தன் தந்தையிடம் அடியும் திட்டும் வாங்கிய போதும் தனக்கு பிடிக்காத கல்வியிடம் இருந்து விலகியே இருந்தார். இளம் வயது முதலே ஒரு முடிவெடுத்தால் அதில் விடாப்பிடியாக இருப்பவர் ஜானகி. படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்தாலும் இசைஞானம் ஜானகியை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. 3 வயதிலேயே கேள்வி ஞானத்துடன் கடினமான பாடல்களை பாடி அசத்திய இவரது இசை ஆர்வத்தை பார்த்து 8 வயதில் பைடிசாமி என்ற நாதஸ்வர வித்வானிடம் இசை கற்க அனுப்பினார் அவரின் தந்தை. ஆர்வமுடன் இசை கற்று வந்த நிலையில் “நீ சங்கீதம் கத்துக்கிட்டது போதும். நீயே சங்கீதம் தான். இனி உனக்கு சங்கீதம் கற்றுக்கொடுக்க தேவையில்லை” எனக்கூறி ஜானகியை வாழ்த்தி அனுப்பினார் அவரின் குருநாதர்.

அதன் பின் சென்னைக்கு குடிபெயர்ந்த நிலையில் ஏவிஎம் ஸ்டுடியோவில் ஜானகி பணிக்கு சேர்ந்தார். இதையடுத்து அவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. 1957-ம் ஆண்டு ‘விதியின் விளையாட்டு’ என்ற திரைப்படத்தில் ‘பெண் என் ஆசை பாழானது ஏனோ…’ என்ற பாடலை பாடினார். அதைத் தொடர்ந்து அவரது குரலில் ஏராளமான வெற்றிப் பாடல்கள் வரிசையாக வந்தது. 1962-ம் ஆண்டு ‘கொஞ்சும் சலங்கை’ என்ற திரைப்படத்தில் இவர் பாடிய ‘சிங்கார வேலனே… தேவா…’ என்ற பாடலை பாடினார். அவ்வுளவு கடினமான பாடலை பிற பாடகர்கள் கூட பாடுவதற்கு அச்சப்படும் நிலையில் தன் இளம் வயதிலேயே அதை பாடி அனைவரையும் வியக்க வைத்தார் எஸ்.ஜானகி. தெலுங்கு, இந்தி மொழிகளை பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டவர் கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளை நன்றாக பேசுவார். எஸ்.ஜானகி தமிழில் பல ஹிட் பாடல்களை கொடுத்திருந்தாலும் 70-களின் இறுதியில் தான் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்க தொடங்கியது. 1976-ம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ திரைப்படம் எஸ்.ஜானகியை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. ‘அன்னக்கிளி’ திரைப்படத்தில் இவர் பாடிய அத்தனை பாடல்களும் பெரும் ஹிட்டடித்தது.

‘அன்னக்கிளி’ திரைப்படம் எஸ்.ஜானகிக்கு மட்டுமல்லாமல் அந்த திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இசைஞானி இளையராஜாவுக்கும் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இசைஞானி இளையராஜா தன் திரைப்படங்களில் தொடர்ந்து எஸ்.ஜானகி அவர்களை பாட வைத்தார். இதனால் 70-களின் பிற்பகுதியில் தொடங்கி 90-கள் வரை இசைஞானி இளையராஜாவின் இசையில் எஸ்.ஜானகி பாடிய பாடல்கள் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இளையராஜாவின் இசையில் எஸ்.ஜானகி – எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய டூயட் பாடல்கள் காதல் ரசம் சொட்டும் இனிய கீதங்கள். அதைத்தொடர்ந்து 90-களில் அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி அனிருத் வரை எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் எஸ்.ஜானகி பாடியுள்ளார்.

சோலோ, டூயட், தாலாட்டு என எல்லா வகையான பாடல்களையும் பாடி ரசிகர்களை கவர்ந்தவர் எஸ்.ஜானகி. கஷ்டமான பாடலாக இருந்தாலும் கண்களை மூடாமல், கைகளை அசைக்காமல், முகபாவனைகளில் கஷ்டப்படாமல் மிக எளிதாக பாடுவது இவரின் சிறப்பு. கதையின் உணர்வுகளை, கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை தன் குரல் வழியே மிக அழகாக வெளிப்படுத்தி அந்த பாடலில் நம்மை லயிக்க செய்வார் ஜானகி.

குழந்தைக் குரலில், ஆண் குரலில் பாடி எல்லோரையும் ஆச்சர்யப்படவைப்பார். ‘குரு’ திரைப்படத்தில் ‘எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்…’ என்ற பாடலில் போதையில் பாடுவது போல் பாடியவர் ’16 வயதினிலே’ திரைப்படத்தில் இடம்பெறும் ‘செந்தூரப்பூவே செந்தூரப்பூவே..’ என்ற பாடலில் பருவ வயது பெண்ணின் ஏக்கத்தையும் ஆசையையும் வார்த்தைகளை உச்சரிக்கும் விதத்திலேயே நமக்கு உணர்த்துவார். அதே போல் ‘ஜானி’ திரைப்படத்தில் ‘காற்றில் எந்தன் கீதம்’ பாடலில் மென்சோகத்தை தன் குரல் வழியே நமக்கு உணர்த்துவார். நாம் எந்த மனநிலையில் இருந்தாலும் அந்த பாடலை கேட்கும் போது அந்த குரல் உணர்த்தும் சோகம் நமக்கு புரியும்.

அதிகமான இந்தி மொழிப் பாடல்களைப் பாடிய ஒரே தென்னிந்திய பாடகி எஸ்.ஜானகி அவர்கள். நான்கு தேசிய விருதுகள், பல்வேறு மாநிலங்களின் முப்பதுக்கும் அதிகமான விருதுகளை வென்றவர் ஜானகி. புகழின் உச்சியில் இருந்தபோதும் மத்திய அரசின் பத்ம விருதுகள் கிடைக்கவில்லை. எனவே, 2013-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்த ‘பத்ம பூஷண்’ விருதைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார் எஸ்.ஜானகி. தென்னிந்திய கலைஞர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை தைரியமாகச் சொன்னார்.

1992-ம் ஆண்டு தேவர் மகன் படத்தில் பாடிய ‘இஞ்சி இடுப்பழகா’ பாடலுக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதைப் பெற டெல்லி சென்றிருந்த போது செய்தியாளர்களிடம், “இதே ஆண்டில் ‘ரோஜா’ படத்தில் ‘சின்னச் சின்ன ஆசை’ பாடலை பாடகி மின்மினி மிகத் திறமையாகப் பாடியிருந்தார். எனக்குக் கிடைத்த தேசிய விருது அந்தப் பொண்ணுக்கு கிடைத்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன்” என கூறி நெகிழவைத்தவர் எஸ். ஜானகி. அந்த அளவுக்குத் திறமையான கலைஞர்களை ஊக்குவிப்பதிலும் முன்னோடியாக இருந்தவர் ஜானகி.

பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் 48 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியவர் இசையரசி எஸ்.ஜானகி. இத்தனை வருடங்களில் எத்தனையோ விருதுகள் பெற்று பல ரசிகர்களை பெற்ற இசையரசி எஸ்.ஜானகி தான் பாடியது போதும் என்று ஒதுங்கி அமைதியாய் இருந்தபடி வாழ்வை உற்று கவனிக்கிறார். இன்னும் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் அவருடைய பாடல்கள் பல தலைமுறைகளுக்கு பயணித்து கொண்டே இருக்கும்.


Like it? Share with your friends!

0
1 share

What's Your Reaction?

Angry Angry
0
Angry
Cute Cute
1
Cute
WTF WTF
0
WTF
Love Love
0
Love

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format