தமிழ்நாட்டின் ‘குட்டி ஜப்பான்’ என்றால் அது சிவகாசி மாவட்டம் தான். சிவகாசியை பொறுத்தவரை அங்குள்ள பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் அதைச் சார்ந்த தொழிற்சாலைகளில் எப்போது யார் வேலை கேட்டாலும் உடனே வேலை வழங்குவதோடு அதற்கான பயிற்சியும் அளித்து உரிய சம்பளமும் வழங்குவார்கள். சிவகாசி பகுதியில் பெரும்பாலான நிறுவனங்களில் ‘ஆட்கள் தேவை’ என்ற பலகையை நாம் பார்க்க முடியும். வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சிவகாசி மாவட்டத்தில் பலர் வேலைக்கு வந்து கொண்டிருப்பார்கள்.
இப்படி பலருக்கு வேலை வழங்கி பல குடும்பங்களை வாழ வைத்த சிவகாசியின் நிலை இப்போது தலைகீழாக மாறிவிட்டது. சுற்றுச்சூழல் மாசு கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதியளித்தது. மேலும் சில வேதிப்பொருட்கள் பட்டாசு உற்பத்தியில் பயன்படுத்த தடை விதித்ததோடு பசுமை பட்டாசுகளை தயாரிக்க உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு பட்டாசு உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தீபாவளி முடிந்த பின்னர் சிவகாசி பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ஒன்று கூடி ஆலோசனை செய்தனர். தீர்வு கிடைக்கும் வரை பட்டாசு ஆலைகளை காலவரையின்றி மூட முடிவு செய்தனர். இதனால் கடந்த 80 நாட்களுக்கு மேலாக பட்டாசு ஆலைகள் இயங்காமல் உள்ளன.
கடந்த 1930-ம் ஆண்டு சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தொடங்கியது. இந்த தொழிலில் திறமையுடன் செயல்பட்டதை அடுத்து இந்த தொழில் பெரும் வளர்ச்சி கண்டது. 90 ஆண்டுகளில் 1070 பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டு 4 லட்சம் மக்களுக்கு வேலை வழங்கும் தொழிலாக இது மாறியது. மேலும் பட்டாசு தொழில் சார்ந்த 50-க்கும் மேற்பட்ட துணை தொழில்களும் நடந்து வந்தது. பட்டாசு உற்பத்தியில் தொடங்கி டெலிவரி செய்வது வரை சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் இதில் பணிபுரிந்து வந்தனர்.
தற்போது இவர்கள் அனைவரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த தொழிலில் ஈடுபட்டு வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். சிவகாசி மக்கள் பலர் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கு செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது. மேலும் வெளி மாநிலத்தில் இருந்து வந்து சிவகாசியில் தங்கி வேலை பார்த்தவர்கள் அனைவரும் சிவகாசியை விட்டு வெளியேறி விட்டனர். அங்குள்ள மக்களுக்கு கஞ்சித் தொட்டி திறக்க வேண்டிய அவலமும் ஏற்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி சிவகாசியின் ஒட்டுமொத்த வர்த்தகமும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. சிவகாசி மற்றும் அதன் சுற்றுபுறத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் சிவகாசி ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருள் கொண்டு செல்லும் 1000-க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் வந்து செல்லும். ஆனால் ஆலைகள் மூடிக்கிடப்பதால் பெட்ரோல் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும் அங்குள்ள விடுதிகள் மற்றும் ஹோட்டல்களிலும் மக்கள் கூட்டம் இல்லாமல் வியாபாரம் மோசமாகியுள்ளது. பட்டாசு வாங்க வெளியூர்களில் இருந்து வருபவர்கள் ஆலைகளுக்கு செல்ல ஆட்டோக்களை பயன்படுத்தி வந்தனர். சுமார் 800-க்கும் அதிகமான ஆட்டோக்கள் இயங்கி வந்த நிலையில் கடந்த 3 மாதமாக வெளியூர் வியாபாரிகள் வராததால் ஆட்டோ ஓட்டுனர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதி மக்களுக்கு வேலை அளித்த சிவகாசியில் தற்போது சிவகாசி மாவட்ட மக்களுக்கே வேலை இல்லாத அவல நிலை உருவாகியுள்ளது. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சிவகாசி மக்களின் நிலை மாற அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பு. அரசு கவனிக்குமா??