தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை அடுத்து காற்றின் தரம் உயர்ந்துள்ளது


நம் நாட்டில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்கவும் தங்கள் உரிமைகளை காக்கவும் பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அத்தகைய போராட்டங்களில் மக்களால் மறக்க முடியாத போராட்டம் தான் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் நடந்த போராட்டம்.

மே மாதம் 22-ம் நாள் தமிழகத்தின் கருப்பு தினம் என்று கூறலாம். தங்கள் வாழ்வாதாரம் காக்க போராடிய மக்களை காவல் துறை அதிகாரிகளே துப்பாக்கியால் சுட்டதில் 14 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி தொடங்கியது. 99 நாட்களாக அமைதியான முறையில் நடைபெற்ற இந்த போராட்டம் கடந்த மே 22-ம் தேதி 100-வது நாளை எட்டியது.

தூத்துக்குடி ஆடசியர் அலுவலகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆனால் தடுப்பு சுவரையும் மீறி போராட்டக்காரர்கள் உள்ளே நுழைய முயன்ற போது காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கி சூட்டுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். இதனையடுத்து கடந்த மே 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசானை வெளியிடப்பட்டு ஆலை மூடப்பட்டது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு, தூத்துக்குடியில் காற்று மாசு கனிசமான அளவு குறைந்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை இயங்கிக் கொண்டிருந்த 2017-ம் ஆண்டு செப்டம்பரில் எடுக்கப்பட்ட பரிசோதனையில், சல்பர் டை ஆக்சைடு 20.0 மைக்ரோகிராமும், நைட்ரஜன் டை ஆக்ஸைடு 15.0 மைக்ரோகிராமும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை மூடிய பின்னர், அக்டோபர் 12, 13 தேதிகளில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் சல்பர் டை ஆக்சைடு 5.0 மைக்ரோகிராமும், நைட்ரஜன் டை ஆக்ஸைடு 7.0 மைக்ரோகிராமும் இருந்ததாக பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது.

சுத்தமான காற்றை சுவாசிக்கவும், சுத்தமான குடி நீரை பெறவும் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்கவும் போராடியவர்களுக்கு இந்த அரசு துப்பாக்கி குண்டுகளை பதிலுக்கு அவர்களுக்கு கொடுத்து பெரும் வரலாற்று பிழை செய்துவிட்டது. உயிர் நீத்த அந்த உயிர்களுக்கு சரியான நியாயம் கிடைக்கும் வரை காலம் இந்த வரலாற்று பிழையினை மன்னிக்காது.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: General

DON'T MISS