மனிதி #5 : ஆங்கிலேயர்களை கதிகலங்க வைத்த வீரமங்கை வேலுநாச்சியார் – ஆங்கிலேயர்களை அழிக்க உலகில் முதல் தற்கொலைப் போராளியான குயிலி


0
1.5k shares

ஆங்கிலேயர்களை எதிர்த்து பல போராட்டங்கள் தமிழ் மண்ணில் நடைபெற்றுள்ளன. அத்தகைய போராட்டங்களில் முக்கிய பங்காற்றிய இரு வீரமங்கைகள் வேலுநாச்சியார் மற்றும் குயிலி. ராமநாதபுர மன்னர் செல்லமுத்து சேதுபதியின் ஒரே மகள் வேலு நாச்சியார். அரண்மனையில் ஆண் வாரிசு இல்லாத குறையே தெரியாத அளவுக்கு வீர விளையாட்டுகளான சிலம்பம், குதிரையேற்றம், வாள் வீச்சு, வில் வித்தை உள்ளிட்ட வீரக்கலைகளில் பயிற்சி பெற்றவர் தன்னுடைய 16 வயதிலேயே சிவகங்கையின் மன்னரான முத்துவடுகநாதரை மணந்து பட்டத்து ராணியாக வலம் வந்தார். சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்த முத்துவடுகநாதர் ஆங்கிலேயர்களைக் கடுமையாக எதிர்த்தார். படைகளைத் திரட்டி ஆங்கிலேயர்கள்மீதும், அவர்களின் கூட்டாளிகளான ஆற்காடு நவாப்கள்மீதும் போர் தொடுத்தார்.

இந்நிலையில் 1772-ம் ஆண்டு காளையார்கோயில் போரில் வெள்ளையர்களால் வேலு நாச்சியாரின் கணவரான முத்துவடுகநாதரும் மகளான கௌரி நாச்சியாரும் கொல்லப்பட்டனர். இதனால் கொதித்து எழுந்த வேலுநாச்சியார் ஆங்கிலேய ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர சூளுரைத்தார். விருப்பாச்சி கோபால்நாயக்கரிடம் அடைக்கலம் பெற்றவர் தனது தளவாய் தாண்டவராயன் பிள்ளையையும் சேனாபதிகளான மருது சகோதர்களையும் அழைத்துக் கொண்டு குருநில மன்னர்களுடன் ஒன்று சேர்ந்து போராட பல இடங்களுக்கு சென்றார்.

வெள்ளையர்களை வெல்வதற்கான உத்திகளை வகுத்து படைகளை முன்னின்று நடத்தினார். சேனாபதிகளான மருது சகோதரர்களும் உற்ற துணையாக இருந்து படைகளுக்கு தலைமை தாங்கினர். குதிரைப்படை வீரர்கள், காலாட்படை வீரர்கள் மற்றும் பீரங்கிப்படை வீரர்களுடன் திண்டுக்கல்லில் இருந்து சிவகங்கை நோக்கி சென்று காளையார்கோயிலை கைப்பற்றினார் வேலுநாச்சியார்.

ஆங்கிலேயர்களை வீழ்த்த வேலுநாச்சியாருக்கு பெரிதும் துணைபுரிந்தவர் குயிலி. பெரியமுத்தன் – ராக்கு தம்பதியினரின் மகளாகப் பிறந்தார் குயிலி. தன் மனைவி ராக்கு இறந்ததையடுத்து குயிலியை அழைத்துக்கொண்டு சிவகங்கை அருகேயுள்ள முத்துப்பட்டி என்ற கிராமத்துக்கு முத்தன் சென்றுவிடுகிறார். அங்கிருந்த மக்களோடு சேர்ந்து அரண்மனைக்கு தோல்தைக்கும் வேலைக்குச் செல்கிறார். வேலுநாச்சியாரின் வீரம் பற்றி தன் இளம் வயதிலேயே அறிந்து கொள்ளும் குயிலி அவரை போல் வீரபெண்மணியாக உருவெடுத்தார். ஒரு கட்டத்தில் குயிலி, வேலுநாச்சியாரைப் பார்க்கவேண்டும் என்று எண்ணும்போது, இந்த தகவல் வேலுநாச்சியாருக்குப் போனது. பின் முத்தனையும், குயிலியையும் அழைத்து, “நீங்கள் அரண்மனையில் எங்கு வேண்டுமானாலும் சென்று வரக்கூடிய அளவுக்கு சுதந்திரம் உண்டு” என உத்தரவிடுகிறார். காலப்போக்கில் வேலுநாச்சியாரின் அன்பிற்குரியவராக அவரின் மனதில் இடம்பிடித்தார் குயிலி. இந்நிலையில் வேலு நாச்சியாரின் கணவரான முத்துவடுகநாதரும் மகளான கௌரி நாச்சியாரும் கொல்லப்பட்டதை அடுத்து வேலுநாச்சியாருக்கு சிறந்த ஒற்றனாகச் செயல்பட்டார் குயிலியின் தந்தை முத்தன். தந்தையை போல் குயிலியும் சிவகங்கை பகுதியில் நடக்கும் தகவல்களை சேகரித்து வந்து கூறுகிறார்.

இந்நிலையில் வேலுநாச்சியாருக்குப் போர்ப் பயிற்சி அளித்த ஆசிரியர்களில் முக்கியமானவரான வெற்றிவேலு ஒரு கட்டத்தில் ஆங்கிலேயருக்கு துணை போக ஆரம்பிக்கிறார். போர்க்களத்தில் இருந்த குயிலி, தன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் சிவகங்கைக்குச் செல்லத் திட்டமிட்டார் . இதை அறிந்துகொண்ட வெற்றிவேலு, குயிலிக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று கருதி, ஒரு கடிதத்தைத் கொடுத்து சிவகங்கை அரண்மனைக்கு அருகே வசித்த மல்லாரிராயன் என்பவரிடம் கொடுக்கச் சொன்னார். வெற்றிவேலின் செயல்பாடுகள்மீது ஏற்கெனவே சந்தேகம் கொண்டிருந்த குயிலி அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தார். அந்தக் கடிதத்தில் அரசி வேலுநாச்சியாரைக் கொல்வதற்கான திட்டங்கள் விவரிக்கப்பட்டிருந்தது. சற்றும் தாமதிக்காத குயிலி, குத்தீட்டியை எடுத்துக்கொண்டு வெற்றிவேலின் இருப்பிடம் சென்று அவரைக் கொன்றார்.

இதையறிந்த வேலுநாச்சியார் குயிலியின் வீரத்தை கண்டு நெகிழ்ந்து போகிறார். அன்று முதல் வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளரானார் குயிலி. 1780 – ம் ஆண்டு ஐப்பசி மாதம் 5 – ம் நாள் சிவகங்கையை மீட்க, விருப்பாச்சியிலிருந்து படையெடுத்துச் சென்றார் வேலுநாச்சியார். பெண்கள் படைக்குத் தலைமையேற்றார் குயிலி.

சிவகங்கை நோக்கி வரும் வழியில் மல்லாரிராயன், மல்லாரிராயனின் தம்பி ரங்கராயன், மார்டின்ஸ், பிரைட்டன் போன்ற வெள்ளைக்கார அதிகாரிகளையும், நவாப்பின் படைத்தளபதியான பூரிகானையும் கொன்று குவித்து முன்னேறியது வேலுநாச்சியாரின் படை.

வேலுநாச்சியாரின் கணவரான முத்துவடுகநாதரைக் கொன்ற ஆங்கிலத் தளபதி ஜோசப் ஸ்மித்தை காளையார்கோயிலில் அடித்து வீழ்த்திய நிலையில் சிவகங்கைக்குள் நுழைவது மட்டும் கடினமாக இருந்தது. ஏனெனில் காளையார்கோயிலில் இருந்து சிவகங்கை வரை ஒவ்வொரு அடிக்கு ஒரு வீரனை நிறுத்தியிருந்தான் ஆங்கிலத் தளபதி பான்சோர்ஶ்ரீ.

இதையடுத்து மாறுவேடத்தில் சென்று ஊர் நிலவரம் அறிந்து வந்த குயிலி அடுத்த நாள் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெறவிருக்கும் விஜயதசமித் திருவிழாவில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி என்ற செய்தியை கூறுகிறார். இதனால் படையில் உள்ள பெண்கள் மாறுவேடத்தில் கோயிலுக்குள் சென்று போர் புரியலாம் என்ற யோசனையை முன்வைக்கிறார் குயிலி. குயிலியின் யோசனையை ஏற்றுக்கொண்டார் வேலுநாச்சியார். அடுத்த நாள் அரசியின் தலைமையில் அனைவரும் மக்களோடு மக்களாகக் கோயிலுக்குள் புகுந்தனர். மருது பாண்டியர்களின் தலைமையில் படைவீரர்கள் ஊருக்கு வெளியே காத்துக்கொண்டிருந்த நிலையில் ஆயுத பூஜைக்காக வெள்ளையர்கள் ஆயுதங்கள் அனைத்தையும் கோட்டையின் நிலா முற்றத்தில் வைத்திருந்தனர். உள்ளே நுழைந்ததுமே அதைக் கவனித்தார் குயிலி.

சரியான தருணம் பார்த்துக் கொண்டிருந்த அரசியும் பெண்கள் கூட்டம் கலையும் நேரம் கையை உயர்த்தி, ‘வெற்றிவேல்! வீரவேல்’ என்று முழங்கினார். மாலைகளுக்குள் இருந்த வாள் வெள்ளையர்களின் தலையை நோக்கிச் சீறிப்பாய்ந்தது. வரவிருக்கும் ஆபத்தை உணர்ந்த ஆங்கிலேயத் தளபதி பான்சோர் ‘சார்ஜ்’ என்று கத்த வெள்ளையர்களும் தங்களுடைய ஆயுதக் கிடங்குக்கு ஓடினர். அவர்களுக்கு முன்னே குயிலி கோயிலில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய்யை தன் உடலில் ஊற்றிக் கொண்டு ஓடினார். தீப்பந்தத்தால் தன்மேல் தீயிட்டுக்கொண்டு வெள்ளையர்களின் ஆயுதக் கிடங்குக்குள் குதித்த குயிலி தன்னையும் மாய்த்துக்கொண்டு வெள்ளையர்களின் ஆயுதங்களையும் அழித்தார். வேலுநாச்சியாரின் படைவீரர்கள் மீதமிருந்த வெள்ளையர்களை வீழ்த்திய நிலையில் போரில் வென்ற அரசி வேலுநாச்சியார் குயிலியை தேடுகிறார். தன்னுயிர் தந்து மண்ணுயிர் மீட்டது குயிலிதான் என்பதை அறிந்து அவரின் வீரத்தையும் தியாகத்தையும் கண்டு நெகிழ்ந்து போனார் வேலுநாச்சியார்.

அதன் பின் சிவகங்கை சீமையை மீட்டு 1780-ம் ஆண்டு முதல் 1789-ம் ஆண்டு வரை ராணியாக மக்கள் போற்றும் ஆட்சி புரிந்தார் வேலு நாச்சியார். இந்நிலையில் 1796-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி தன் 66 வயதில் இம்மண்ணுக்கு விடை கொடுத்தார் வீர மங்கை வேலு நாச்சியார்.

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண் பேரரசி என்ற பெருமையை கொண்டதோடு ஆங்கிலேய படைகளை வீழ்த்தி வீரமங்கையாக வலம் வந்தவர் வேலுநாச்சியார். அவரை போலவே ஆங்கிலேயர்களை வீழ்த்த தன்னையே மாய்த்துக் கொண்டு உலகின் முதல் தற்கொலைப் போராளியானார் குயிலி. இந்த இரு வீரமங்கைகளின் வீரமும் தியாகமும் நம் மண்ணுக்கு எப்போதும் பெருமை சேர்க்கும்.


Like it? Share with your friends!

0
1.5k shares

What's Your Reaction?

Angry Angry
0
Angry
Cute Cute
0
Cute
WTF WTF
0
WTF
Love Love
1
Love

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format