ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பெரும் வெற்றி பெற்ற டாப் 5 ஏ.ஆர்.ரஹ்மான்-இயக்குனர்கள் காம்போ


இந்திய சினிமாவுக்கு 1992 என்பது ஒரு சிறப்பான வருடம் என்று கூறலாம். இந்திய திரையுலகை தன் இசையால் கட்டிப்போடும் ‘ரிதங்களின் காதலன்’ ஏ.ஆர்.ரஹ்மான் ‘ரோஜா’ என்ற திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான வருடம் அது. ‘ரோஜா’ என்ற திரைப்படத்தில் தொடங்கிய அவரின் இசை பயணம் ‘சர்வம் தாள மயம்’ வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பல இயக்குனர்களுடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றினாலும் ஒரு சில இயக்குனர்களின் கூட்டணியில் அமைந்த ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் ரசிகர்களுக்கு எப்போதும் நெருக்காமனவை. அவ்வாறு பெரும் வரவேற்பை பெற்ற டாப் 5 இயக்குனர்கள் காம்போ இதோ:

5.ராஜீவ் மேனன் – ஏ.ஆர்.ரஹ்மான்: இந்த கூட்டணியில் 3 திரைப்படங்கள் உருவானதோடு அந்த 3 திரைப்படங்களின் பாடல்களும் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமானவை. ராஜீவ் மேனன் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த ‘மின்சார கனவு’ மற்றும் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ஆகிய 2 திரைப்படங்களின் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றது. ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘கண்ணாமூச்சி ஏனடா’, ‘எங்கே எனது கவிதை’, உள்ளிட்ட பாடல்கள் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஹிட்டான பாடல்கள். மேலும் ‘மின்சார கனவு’ திரைப்படத்தில் ‘ஊலலலா’, ‘அன்பென்ற மழையிலே’, ‘தங்க தாமரை மகளே’ உள்ளிட்ட பாடல்கள் நம் நினைவை விட்டு நீங்காத பாடல்கள். குறிப்பாக மின்சார கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடலும் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘என்ன சொல்ல போகிறாய்’ பாடலும் பல ரசிகர்களின் பிளேலிஸ்டில் இன்று வரை இடம் பெற்று கொண்டு தான் இருக்கிறது. தற்போது வெளிவரவிருக்கும் ‘சர்வம் தாள மயம்’ திரைப்படத்தின் பாடல்களும் திரைப்படம் வெளிவரும் முன்பே ரசிகர்களை கவர்ந்துள்ளது. ‘மாயா மாயா’, ‘டிங்கு டாங்கு’, ‘வரலாமா’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

4.பாரதிராஜா-ஏ.ஆர்.ரஹ்மான்: இயக்குனர் பாரதிராஜாவின் ஆரம்பகால திரைப்படங்களில் இசைஞானி இளையராஜா தான் இசையமைத்தார். இந்நிலையில் 1993-ம் ஆண்டு வெளிவந்த ‘கிழக்குச் சீமையிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் இந்த ஸ்பெஷல் கூட்டணி உருவானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பெரும்பாலான திரைப்படங்களின் கதை நகரத்து பிண்ணனியில் அமைந்திருக்கும். ஆனால் இயக்குனர் பாரதிராஜாவின் கதைகள் கிராமத்து பிண்ணனியை கொண்ட கதைகள் என்பதால் இந்த கூட்டணி இன்று வரை ரசிகர்களுக்கு மிகவும் ஸ்பெஷல். கிராமத்தின் மண் மனம் மாறாத ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் ஒவ்வொன்றும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. இந்த கூட்டணியில் அமைந்த முதல் திரைப்படமான ‘கிழக்கு சீமையிலே’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆத்தங்கர மரமே’, ‘வண்டி மாடு எட்டு வச்சி’, ‘மானுத்து மந்தையில’ உள்ளிட்ட பாடல்களை நம்மால் மறக்க முடியாது. இதே கூட்டணியில் 1994-ம் ஆண்டு வெளிவந்த ‘கருத்தம்மா’ திரைப்படத்தில் ‘போராளே பொன்னுத்தாயி’ டூயட் பாடலும் மறைந்த பாடகி சுவர்ணலதா பாடிய சோக பாடல் ‘போராளே பொன்னுத்தாயி’ பாடலும் பெரும் ஹிட்டடித்தது. மேலும் பாடகி சுவர்ணலதா இந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றதோடு தமிழ்நாடு அரசின் மாநில விருதையும் பெற்றார். இதே திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘பச்ச கிளி பாடும்’ உள்ளிட்ட பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. இதை தொடர்ந்து இதே கூட்டணியில் 1999-ம் ஆண்டு வெளியான ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தில் ‘சொட்ட சொட்ட நனையுது’, ‘திருப்பாச்சி அரிவாள’ உள்ளிட்ட பாடல்களும் மிகவும் ஸ்பெஷல். இதையடுத்து 2003-ம் ஆண்டு வெளிவந்த ‘கண்களால் கைது செய்’ திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

3.கதிர்-ஏ.ஆர்.ரஹ்மான்: இந்த கூட்டணி 1993-ம் ஆண்டு ‘உழவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் உருவானது. ‘உழவன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ’, ராக்கோழி ரெண்டும்’ உள்ளிட்ட பாடல்கள் நமக்கு எளிதில் நினைவுக்கு வரும் பாடல்கள் . இதையடுத்து 1996-ம் ஆண்டு வெளியான ‘காதல் தேசம்’ திரைப்படத்தின் மூலம் இந்த கூட்டணி வலுப்பெற்றது. ‘காதல் தேசம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எனை காணவில்லையே’, ‘ஓ வெண்ணிலா’, ‘தென்றலே தென்றலே’ உள்ளிட்ட மெலடி பாடல்கள் காதலர்களால் கொண்டாடப்பட்டது. மேலும் ‘முஸ்தஃபா முஸ்தஃபா’ என்ற பாடல் பலரது கல்லூரி நாட்களை நினைவுபடுத்தும் அளவுக்கு அப்போதே டிரெண்டிங் ஆனது. இப்போதும் கல்லூரியில் படிப்பை முடித்து விடைபெறும் நண்பர்கள் நினைவுகூரும் ஒரு பாடல் இது தான். இதையடுத்து கதிர் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் 1999-ம் வருடம் வெளியான ‘காதலர் தினம்’ திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. ‘என்ன விலை அழகே’, ‘காதலெனும் தேர்வெழுதி’, ‘தாண்டியா ஆட்டமும்’, ‘நினைச்ச படி நினைச்ச படி’, ‘ரோஜா ரோஜா’, உள்ளிட்ட பாடல்கள் இன்று வரை அனைவராலும் ரசிக்கப்படுகிறது. இதையடுத்து 2002-ம் வெளியான ‘காதல் வைரஸ்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏ ஏ என்ன ஆச்சி’, ‘சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது’, ‘எந்தன் வானில்’ உள்ளிட்ட பாடல்கள் ரஹ்மான் ரசிகர்களுக்கு மிகவும் ஸ்பெஷல்.

2.ஷங்கர்-ஏ.ஆர். ரஹ்மான்: இயக்குனர் ஷங்கர் இதுவரை தமிழில் 12 திரைப்படங்களை இயக்கி உள்ளார். அந்த திரைப்படங்களில் அந்நியன் மற்றும் நண்பன் ஆகிய 2 திரைப்படங்களுக்கு மட்டும் ஹரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மற்ற 10 திரைப்படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை. 1993-ம் ஆண்டு இயக்குனர் ஷங்கரின் முதல் திரைப்படமான ‘ஜென்டில்மேன்’ மூலம் உருவான இந்த மாஸ் கூட்டணி சென்ற வருடம் 2018-ல் வெளியான ‘2.0’ வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ‘ஜென்டில் மேன்’, ‘காதலன்’, ‘இந்தியன்’, ‘ஜீன்ஸ்’, ‘முதல்வன்’, ‘பாய்ஸ்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘ஐ’, ‘2.0’ என இந்த மாஸ் கூட்டணியில் அமைந்த அனைத்து திரைப்படங்களின் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

1.மணிரத்னம்-ஏ.ஆர்.ரஹ்மான்: இயக்குனர் பாரதிராஜாவை போல் இயக்குனர் மனிரத்னத்தின் ஆரம்பகால திரைப்படங்களுக்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைத்திருந்தார். இந்நிலையில் 1992-ம் வருடம் வெளியான ‘ரோஜா’ என்ற திரைப்படத்தின் மூலம் உருவான இந்த மாஸ்-கிளாஸ் கூட்டணி சென்ற ஆண்டு 2018-ல் வெளியான ‘செக்க சிவந்த வானம்’ வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மானை இந்திய திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமையும் இயக்குனர் மணிரத்னத்தை சேரும். இயக்குனர் மனிரத்னத்தின் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த ‘ரோஜா’, திருடா திருடா’, ‘பம்பாய்’, ‘இருவர்’, ‘அலைபாயுதே’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘ஆயுத எழுத்து’, ‘ராவணன்’, ‘கடல்’, ‘ஓ காதல் கண்மணி’, ‘காற்று வெளியிடை’, ‘செக்க சிவந்த வானம்’ ஆகிய 12 திரைப்படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை. மேலும் இந்தியில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட ‘குரு’, ‘உயிரே’ மற்றும் மனிரத்னத்தின் தயாரிப்பில் உருவான ‘இந்திரா’ மற்றும் ‘தாஜ்மஹால்’ ஆகிய திரைப்படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்திருக்கிறார். இந்த கூட்டணியில் உருவான 16 திரைப்படங்களின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனதோடு இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: Awesome Music

DON'T MISS