விளையாட்டு துறையை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் வெளிவந்த டாப் 5 திரைப்படங்கள்


தமிழ் சினிமாவில் விளையாட்டு துறையை மையப்படுத்தி வெளிவந்த திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றதோடு இன்று வரை ரசிகர்களின் மனதில் தனி இடத்தையும் பிடித்துள்ளது. அப்படி தமிழில் விளையாட்டு துறையை மையப்படுத்தி வெளிவந்த டாப் 5 திரைப்படங்கள் இதோ:

வெண்ணிலா கபடி குழு: கடந்த 2009-ம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கபடியை மையப்படுத்தி வெளியான திரைப்படம் வெண்ணிலா கபடி குழு. இயக்குனர் சுசீந்திரன் மற்றும் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு இது முதல் திரைப்படமாக அமைந்ததோடு படம் அனைவரும் பாராட்டும் நல்ல வெற்றியை பெற்றது. மேலும் கபடி விளையாட்டு குறித்த காட்சிகள் திரைப்படத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

வல்லினம்: கடந்த 2014-ம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் நகுலன் நடிப்பில் வெளியான திரைப்படம் வல்லினம். தமிழ் சினிமாவில் முதன்முறையாக கூடைப்பந்து விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்த திரைப்படம் இது தான். நட்பை மையப்படுத்தி, அதில் விளையாட்டை புகுத்தி விறுவிறுப்பான கதையை கொடுத்திருப்பார் இயக்குனர் அறிவழகன். கிரிக்கெட் என்ற விளையாட்டுக்கு மட்டுமே இந்தியாவில் முக்கியத்துவம் கொடுப்பதை சிறப்பாக பதிவு செய்த திரைப்படம் வல்லினம்.

ஜீவா: கடந்த 2014-ம் ஆண்டு மீண்டும் விஷ்ணு விஷால்-சுசீந்திரன் கூட்டணியில் விளையாட்டு துறையை மையப்படுத்தி வெளிவந்த மற்றுமொரு திரைப்படம் ஜீவா. இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க போராடும் இளைஞர்கள் பற்றிய கதை தான் ஜீவா. திறமை இருந்தும் கிரிக்கெட் விளையாட வாய்ப்புக்காக போராடும் இளைஞர்களின் மனநிலையை சிறப்பாக பதிவு செய்திருப்பார் இயக்குனர் சுசீந்திரன். ஜீவாவின் நண்பனாக நடித்திருக்கும் லக்ஷ்மன் நிராகரிப்பின் வலியை அழுத்தமாக உணர்த்துவதோடு பெரிதும் கவனிக்க வைத்திருப்பார். கிரிக்கெட்டின் சாதி அரசியலை கடுமையாக சாடியதோடு கோடிக்கணக்கான பணம் புரளும் கிரிக்கெட் அரசியலை தோலுரித்து காட்டிய திரைப்படம் ஜீவா.

இறுதிச்சுற்று: கடந்த 2016-ம் ஆண்டு சுதா கே. பிராசாத் இயக்கத்தில் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் இறுதிச்சுற்று. ஜீவா திரைப்படத்தை போல் இந்த திரைப்படத்தில் பாக்ஸிங் அசோசியேஷன் அரசியலை தோலுரித்து காட்டியிருப்பார் இயக்குனர். பாக்ஸிங் அசோசியேஷன் அரசியலால் ஒலிம்பிக் கனவோடு வாழ்க்கையை தொலைக்கும் மாதவன், கோச் ஆன பின்பும் கோபம் குறையாமல் நடித்திருப்பார். மீனவக் குப்பத்தில் வசிக்கும் மதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரித்திகா சிங் மாதவனை விட அதிகமாக ஸ்கோர் செய்திருப்பார். ரித்திகா சிங் உண்மையில் ஒரு பாக்ஸர் என்பது இன்னொரு பிளஸ். சென்னைத் தமிழில் மாதவனை கலாய்ப்பது, மாதவன் மீது காதல் வயப்படுவது, பாக்ஸிங்கில் அனைவரையும் அசரடிப்பது என ரித்திகாவுக்கு கனமான வேடம். திரைப்படத்தின் உச்சக்கட்ட காட்சியில் வரும் நாக் அவுட் காட்சி சிறப்பு.

கனா: தமிழில் பெண்கள் விளையாட்டு துறையில் சாதிப்பதை மையப்படுத்தி வந்த திரைப்படம் என்றால் நம் நினைவுக்கு உடனே வருவது ‘இறுதிச்சுற்று’ திரைப்படம் தான். அந்த வரிசையில் கடந்த வருடம் 2018-ல் வந்த திரைப்படம் தான் ‘கனா’. கிராமத்தில் வசிக்கும் விவசாயியான சத்யராஜின் மகள் ஜஸ்வர்யா ராஜேஷ். தன் தந்தைக்கு மிகுவும் பிடித்த விளையாட்டு கிரிக்கெட், ஆனால் உலகக்கோப்பையில் இந்தியா தோற்றுப்போவதை பார்த்து அவர் அழ கிரிக்கெட் விளையாட்டே ஐஸ்வர்யா ராஜேஷின் லட்சியமாக மாறுகிறது. விளையாட்டில் விக்கெட் எடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சிக்ஸர் அடித்திருப்பார். கிரிக்கெட் விளையாட வேண்டாம் என்று சண்டை போடும் அம்மாவிடம் பிடிவாதம் பிடிப்பது, அப்பாவின் செல்ல மகளாக காட்டும் அன்பு, கிரிக்கெட் செலக்ஷனில் செலக்ட் ஆகாத போது சோகம் என பல இடங்களிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஸ்கோர் செய்திருப்பார்.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: Awesome Spotlight

DON'T MISS