தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர் ‘ராம்’


தீடிரென்று யாரையாவது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அளவுக்கு அதிகமாக கொண்டாட இந்த மனம் துடித்திடும். அதற்கு ஒரு காரணமும் இருக்கலாம், காரணம் இல்லாமலும் கொண்டாடி ரசிக்கலாம். தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத இயக்குனர்கள் வரிசையில் நிச்சயம் இவர் பெயர் இடம் பெற்றிருக்கும். ஆழமான கருத்தை அழுத்தமாக சொல்வதில் ஆளுமை பெற்ற கலைஞர். தொடர்ச்சியாக கமெர்ஷியல் படங்களால் தமிழ் சினிமா கலையிழந்த சமயம் அது. தமிழ் பயின்ற ஒருவரின் யதார்த்த வாழ்க்கையை திரைக்கு முன் பல அழுத்தமான கருத்துக்களோடு கொண்டு வந்து தமிழ் சினிமாவிற்கு புத்துயிர் அளித்தார் அந்த இளைஞர். கமெர்ஷியலை வாழ்வியலாக திரையில் பார்த்த ரசிகர்கள் அனைவருக்கும் யதார்த்தத்தின் உச்சமாய் மனதிற்குள் நுழைந்தது அவரின் முதல் படம். சமூகத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஒரு இளைஞன், அவன் கடந்து வந்த பாதை,காதலின் சோகம், சோகத்தின் கோபம் என்று நம்மை கடந்து செல்லும் ஒரு உயிராய் கற்றது தமிழ் படத்தின் கதாபாத்திரங்கள் அமைந்திருக்கும்.

“உலகமே என்ன மயிறு மாதிரி பார்த்துச்சு, ஆன அந்த ஒரு துளி ரத்தம் என்ன தெய்வமாக்குச்சு” என்ற வசனம் எல்லாம் சமூகத்தின் மேல் அவனிக்கிருக்கும் ஆதங்கத்தை இயல்பாய் காட்டியது. அறிமுக இயக்குநரா இவர் ? ஆபாச வசனங்களை ஏன் ஆதரிக்கிறார் ? தமிழை இழிவுபடுத்தி தான் படம் எடுக்க வேண்டுமா ? என்றெல்லாம் பல கேள்விகள் அவர் மேல் அம்புகளாய் பாய்ந்தது. அனைத்திற்கும் அவர் தந்த யதார்த்த பதில்கள் இப்போதும் இணையத்தில் அவ்வப்போது வலம் வரும்.

அழகான குடும்பத்தில் மூத்த மகனாய் பிறந்து, 11 முறை வீட்டை விட்டு ஓடி, அடங்கா பிள்ளையாய் அமெரிக்கன் கல்லூரியில் படித்து, பின் மெட்ராஸ் கிறித்தவ கல்லூரியில் பட்டம் பெற்று சினிமாவில் கதையாசிரியராய் அடியெடுத்து வைத்தார் ராம சுப்ரமணியன் எனும் ”கற்றது தமிழ்” ராம்.

திரை உலகின் ஜாம்பவான் பாலுமகேந்திராவின் கூத்துப் பட்டறையில் தன்னை தானே செதுக்கி கொண்ட ஒரு சிற்பி. புத்தகத்துள் துலைந்த பல நாடோடிகளுள் இவரும் ஒருவர். பயணத்தில் புது அனுபவம் காண்பவர். காடுகளை அதிகம் ரசிப்பவர். மலையேற்றத்தில் புதுச்சுகம் காண்பவர். அவர் கண்ட அனுபவத்தை கதையாக்குவதில் கைதேர்ந்த வித்தைக்காரர். புகையின் புன்னகையில் சில கதைகள் அழுத்தமாய் கொஞ்சம் ஆழமாய்.

ஆறு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு படம் அவரின் இயக்கத்தில் , இடைப்பட்ட அந்த ஆறு வருடத்தில் ரசிகனாக அறுபது முறையாவது அவரின் முதல் படைப்பை பார்த்திருப்பேன். இயக்குனராக வலம் வந்த அவர், அடுத்த படைப்பில் நடிகனாகவும் அவதாரம் எடுத்தார். அப்பாவிற்கும் மகளுக்குமான பாசத்தை பக்குவமாய் அவர் கையாண்ட விதம் தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படும் பேசாக் கதை.

“மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று” அவரின் இந்த வசனம் முற்கால தந்தைகளுக்கும் இக்கால மகள்களுக்கும் உணர்வின் உச்சமாய் மனதை தொட்டது. சமூகத்தின் நடுநிலை தவறும் பொழுது சாதாரண குடும்பத்தில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை மிகத் தெளிவாக சித்தரித்திருப்பார். இளைஞர்கள் தொடங்கி வயது முதிர்ந்தவர்கள் வரை அனைவரின் பாராட்டையும் அள்ளிக் குவித்தது ராமின் தங்க மீன்கள் எனும் இரண்டாம் படைப்பு.

உலக மயமாக்கலில் புதியதாய் ஒரு சென்னை பிறந்து வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற கரு தான் அப்படத்தின் கதை. விரக்தியின்‌ உச்சத்தை முதல் படத்திலும், பாசத்தின் போராட்டத்தை இரண்டாவது படத்திலும் காட்டிய அதே ராம் தான் தனது மூன்றாவது படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதையில் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

இத்தலைமுறை காதல், அது கொடுக்கும் வலிமை, உலக மயமாக்கல் எனும் அட்டைப்பூச்சி, தெரியாத பல கதைகள் என்று சென்னையின் மறுபக்கத்தை கொஞ்சம் நிஜமாக காட்டியிருப்பார். சமகால அரசியலின் தாக்கத்தையும் அவ்வப்போது தன் வார்த்தைகளால் காட்டுபவர்.சமீபத்தில் சவரக்கத்தியாய் ஒரு தோற்றம் மிஷ்கின் எனும் ராட்சஸ அரக்கனோடு.

சினிமாவின் மேலிருந்த அளவு கடந்த காதல், புத்தகங்கள் மீதிருந்த தீராத வாசம் அவரின் பாதையை மிக நேர்த்தியாக செதுக்கியுள்ளது. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் மக்களின் எதிர்பார்ப்பை யதார்த்தமாய் பதிவு செய்யும் இயக்குநராக என்றும் தனித்துவமாய் நிற்பவர்.

பேனர்களே இல்லாத ஓர் பிரபலமான தியேட்டரில் வெகு நாட்கள் கழித்து இன்று மீண்டும் அவரின் படம் “பேரன்பு” ,

இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் பேசிராத, பேசத் தவறிய, பல யாதார்த்த நிகழ்வுகளின் பிரதிபலிப்பு. படம் முடிந்ததும் உண்மையில் நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் தான் என்ற எண்ணம் மனம் முழுக்க பரவிடும். அடிதடி, காதல், நட்பு, காமெடி இவை இருந்தால் தான் முழுமையான படம் என்ற பெருவாரியான மக்களின் மனது இன்று தியேட்டர் இருக்கைகள் காலியாக இருந்த போதே தெளிவாக தெரிந்தது.

நம்மை நாள்தோறும் கடந்து செல்லும் அல்லது நாம் கடந்து செல்லும் பல்வேறு மனிதர்களின் வேறுபட்ட நிஜத்தை பேரன்பாய், பெருஞ்சாபமாய், இரக்கமற்றதாய், ஆசிர்வதிக்கப்பட்டதாய் முடிவில் முடிவற்றதாய் எங்கோ தொடர்ப்பு எல்லைக்கு வெளியே தொலைந்து போகும்.

நிச்சயமாக இந்த சமுதாயத்தில் அனைவரும் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் “பேரன்பு”

SHARE YOUR THOUGHTS

Praveen Rcf

Praveen is an amazing person who manages the overall activities of the brand Awesome Machi. He is an engineer by degree but also has thorough knowledge about the Social Media functioning. He is a strong ground in languages Tamil. we wish one day he becomes a Tamil script writer. You can reach Praveen at praveen@awesomemachi.com

More From: Awesome Spotlight

DON'T MISS