சபரிமலையில் இரண்டு பெண்கள் முதன்முதலாக சுவாமி தரிசனம் – இதையடுத்து கோயில் நடை மூடப்பட்டது


கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலில் 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்ற நடைமுறை நீண்ட காலமாக பின்பற்று வந்த நிலையில் இதற்கு எதிராக பல்வேறு மகளிர் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரித்தது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி அனைத்து வயது பெண்களும் ஐயப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தது. சபரிமலைக்கு பெண்கள் செல்வதை விரும்பாத சில இந்து அமைப்புகளும், பக்தர்கள் சிலரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். கோயிலுக்குள் நுழைய முற்பட்ட பெண்களை தடுத்தனர். இதனால் சபரிமலையில் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் இருக்க 144 தடை உத்தரவு போடப்பட்டு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 144 தடை உத்தரவை இந்த மாதம் ஜனவரி 5-ம் தேதி வரை கேரள அரசு நீட்டித்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலாபுரத்தை சேர்ந்த கனகதுர்கா, கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து ஆகிய 40 வயது பெண்கள் இருவரும் சபரிமலைக்கு இன்று அதிகாலையில் சன்னிதானத்திற்கு இருமுடி கட்டி சென்றனர். 18 ம் படிக்கு செல்லாமல் அதனுடைய பக்கவாட்டில் இருக்கக்கூடிய படிக்கட்டு வழியாக சன்னிதானம் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர். பெரும்பாலும் இருமுடி காட்டாமல் சபரிலை வரும் பக்தர்கள் இந்த வழியை பின்பற்றுவது சமீப காலமாக நடந்து வருகிறது.

இவர்கள் இருவரும் ஏற்கெனவே கடந்த மாதம் 24-ம் தேதி சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர். ஆனால், பிந்து, கனகதுர்காவுக்கு 40 வயதே ஆனதால் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் இருவரும் கீழே இறக்கப்பட்டனர்.சபரிமலையில் ஐயப்பன் கோயிலில் பெண்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர் என்ற தகவலை கேரள முதல்வர் பினராயி விஜயனும் உறுதி செய்துள்ளார்.

இதற்கிடையே கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்துவின் வீட்டுக்கும், மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா வீட்டுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சபரிமலைக்குச் சென்று திரும்பிய பிந்து, கனகதுர்கா ஆகியோரைப் பாதுகாப்பான இடத்தில் காவல் துறையினர் தங்கவைத்துள்ளனர்.

இந்நிலையில், சபரிமலையில் பாரம்பரியமாக 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் செல்லத் தடை இருக்கும் நிலையில், அதை மீறி பெண்கள் வந்து தரிசனம் செய்து திரும்பியதால், பாரம்பரிய மீறல் நடந்துள்ளதாக தலைமைத் தந்திரி கண்டரரூ ராஜீவரு தெரிவித்துள்ளார்.

கோயிலுக்குள் இரு இளம் பெண்கள் நுழைந்து சாமி தரிசனம் செய்ததால், கோயிலின் புனித்தன்மை கெட்டுவிட்டதாகவும் கோயில் நடையை அடைக்கவும் தந்திரி ராஜீவரு உத்தரவிட்டுள்ளார். இதனால் பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். சபரிமலை கோயிலில் சுத்தி கலசம் பூஜை நடத்திய பின் கோயில் நடை மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: General

DON'T MISS