ஆங்கிலேய அரசை கதிகலங்க வைத்த வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த தினம் இன்று


சிவகங்கை நகரை ஆள நினைத்த வெள்ளையர்களை எதிர்த்து போரிட்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாள் இன்று. யார் இந்த வேலுநாச்சியார்? இந்திய சுதந்திர வரலாற்றில் பெரும் பங்காற்றிய ஒரு வீர மங்கை வேலுநாச்சியார். வீர மங்கை என்றவுடன் நம் நினைவுக்கு வருவது ஜான்சி ராணி மற்றும் லட்சுமி பாய் தான். ஆனால் சுதந்திர வரலாற்றின் அதிகம் வெளிவராத பக்கங்களில் ஒன்று ராணி வேலுநாச்சியாரின் வீர வரலாறு. ஜான்சி ராணியின் சுதந்திரப் போராட்டத்துக்கு 85 ஆண்டுகள் முன்பே நிகழ்ந்தது தமிழகத்தைச் சேர்ந்த வேலுநாச்சியாரின் வீர வரலாறு. யார் இந்த வேலுநாச்சியார்?

ராமநாதபுர மன்னர் செல்லமுத்து சேதுபதியின் ஒரே மகள் வேலு நாச்சியார். அரண்மனையில் ஆண் வாரிசு இல்லாத குறையே தெரியாத அளவுக்கு வீர விளையாட்டுகளான சிலம்பம், குதிரையேற்றம், வாள் வீச்சு, வில் வித்தை உள்ளிட்ட வீரக்கலைகளில் பயிற்சி பெற்றதோடு ஃபிரெஞ்சு, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளையும் கற்று தேர்ச்சி பெற்றார். தன்னுடைய 16 வயதிலேயே சிவகங்கையின் மன்னரான முத்துவடுகநாதரை மணந்து பட்டத்து ராணியாக வலம் வந்தார் வேலு நாச்சியார். 1772-ம் ஆண்டு காளையார்கோயில் போரில் வெள்ளையர்களால் வேலு நாச்சியாரின் கணவரான முத்துவடுகநாதரும் மகளான கௌரி நாச்சியாரும் கொல்லப்பட்டனர்.

இதனால் கொதித்து எழுந்த வேலுநாச்சியார் ஆங்கிலேய ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர சூளுரைத்தார். விருப்பாச்சி கோபால்நாயக்கரிடம் அடைக்கலம் பெற்றவர் தனது தளவாய் தாண்டவராயன் பிள்ளையையும் சேனாபதிகளான மருது சகோதர்களையும் அழைத்துக் கொண்டு குருநில மன்னர்களுடன் ஒன்று சேர்ந்து போராட பல இடங்களுக்கு சென்றார். வேலுநாச்சியாரின் சார்பாக தளவாய் தாண்டவராயன் பிள்ளை சுல்தான் ஹைதர் அலிக்கு மடல் ஒன்றை எழுதினார். அந்த மடலில் 5000 வீரர்கள் கொண்ட காலாட்படையும், 5000 வீரர்கள் கொண்ட குதிரைப்படையும் கேட்டதை அடுத்து ஹைதர் அலி வேலு நாச்சியாரை நேரில் அழைத்தார். வேலுநாச்சியார் ஹைதர் அலியை சந்தித்த போது வேலுநாச்சியாரின் உருதுப் புலமையை கண்டு வியந்தார் ஹைதர் அலி. அதன் பின் ஹைதர் அலி வேலுநாச்சியார் மடலில் கேட்டது போல் படைகளை கொடுத்தார். இதையடுத்து வெள்ளையர்களை வெல்வதற்கான உத்திகளை வகுத்து படைகளை முன்னின்று நடத்தினார் வேலுநாச்சியார். சேனாபதிகளான மருது சகோதரர்களும் உற்ற துணையாக இருந்து படைகளுக்கு தலைமை தாங்கினர். குதிரைப்படை வீரர்கள், காலாட்படை வீரர்கள் மற்றும் பீரங்கிப்படை வீரர்களுடன் திண்டுக்கல்லில் இருந்து சிவகங்கை நோக்கி சென்று காளையார்கோயிலை கைப்பற்றினார் வேலுநாச்சியார்.

அதன் பின் சிவகங்கை நகரைக் கைப்பற்ற மருது சகோதரர்கள் தலைமையில் படை திரட்டப்பட்டது. வெள்ளையரின் ஆக்கிரமிப்பில் இருந்த சிவகங்கை அரண்மனையில் நவராத்திரி விழாவுக்காக மக்கள் கூடிய போது பெண்கள் படை மாறுவேடத்தில் செல்ல திட்டமிட்டனர். அதன்படி பெண்கள் படையில் வேலுநாச்சியாரின் நம்பிக்கையும் நன்மதிப்பையும் பெற்று வேலுநாச்சியாரின் பாதுகாவலராக இருந்த வீர மங்கை குயிலி உலகின் முதல் தற்கொலைப்படையாக மாற முடிவெடுக்கிறார். அதன்படி தன் உடலில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தார் வீர மங்கை குயிலி. கோட்டையை நோக்கி முன்னேறிய வேலுநாச்சியாரை தடுக்கும் எண்ணத்துடன் ஆற்காட்டு நவாப் வெள்ளையர்களுடன் படையெடுத்து வந்த போது வேலுநாச்சியாரும் மருது சகோதரர்களும் அப்படைகளை வென்றதோடு தன் கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்து சிவகங்கையை கைப்பற்றினார் வேலு நாச்சியார். இந்த வெற்றியை பெற்று போது வேலு நாச்சியாரின் வயது 50.

சிவகங்கை சீமையை மீட்டு 1780-ம் ஆண்டு முதல் 1789-ம் ஆண்டு வரை ராணியாக மக்கள் போற்றும் ஆட்சி புரிந்தார் வேலு நாச்சியார். இந்நிலையில் 1796-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி தன் 66 வயதில் இம்மண்ணுக்கு விடை கொடுத்தார் வீர மங்கை வேலு நாச்சியார். அவரின் சுதந்திரப் போராட்டத்தை கௌரவிக்கும் விதமாக, இந்திய அரசு 2008-ம் ஆண்டு தபால் தலை ஒன்றை வெளியிட்டது.

ஓவியம் : மருது சகோதரர்களுடன் வேலு நாச்சியார்

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண் பேரரசி என்ற பெருமையை கொண்டதோடு ஆங்கிலேய படைகளை வீழ்த்தி வீரமங்கையாக வலம் வந்த வேலுநாச்சியாரின் வீரம் நம் மண்ணுக்கு எப்போதும் பெருமை சேர்க்கும்.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: General

DON'T MISS