நம் பாரம்பரியத்தின் அடையாளமான பொங்கல் பண்டிகை தொலைக்காட்சி மற்றும் கைப்பேசியில் அடைபட்டது ஏன்?


உலக தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் பண்டிகை பொங்கல். விவசாயி தன் நிலத்தின் விளைச்சலுக்கு உதவிய இயற்கை அன்னைக்கும் தங்களுக்காக உழைத்த கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையின் கொண்டாட்டம் 90-கள் மற்றும் அதற்கு முந்தைய காலக்கட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை நிச்சயமாக கொடுத்திருக்கும். அப்போது அத்தனை கோலாகலமாக கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகை இப்போது வெறும் தொலைக்காட்சியிலும் கைப்பேசியிலும் அடங்கிவிட்டதை போல் நாம் உணர்கிறோம். பெரும்பாலும் கிராமங்களில் மட்டுமே பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாம் அப்போது கொண்டாடிய பொங்கலுக்கும் இப்போது கொண்டாடும் பொங்கலுக்கும் உள்ள வித்தியாசம் இதோ:

போகி: பொங்கலுக்கு முந்தைய நாளான மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுவதே போகி பண்டிகையாகும். வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகியை கொண்டாடுவார்கள். இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே போகியில் எரிப்பதற்காக பொருட்களை சேகரிக்க ஆரம்பிப்பார்கள். யார் வீட்டில் போகி நெருப்பு அதிகமாக எரிகிறது என்று பெரும் போட்டியே இருக்கும்.

குறிப்பாக குழந்தைகள் இந்த பண்டிகைக்காக காத்திருப்பார்கள். போகி பண்டிகைக்கு முந்தைய நாள் போகி பண்டிகைக்காக விற்கப்படும் கொட்டு மோளத்தை குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பார்கள். மேலும் போகி பண்டிகையின் முந்தைய நாள் இரவு எப்போது விடியற்காலை நேரம் வரும் என்று கடிகாரத்தை தூங்காமல் பார்த்து கொண்டிருந்த அந்த நாட்களை நம்மால் எப்படி மறக்க முடியும்? நம் தெருவில் யாரேனும் அதிகாலை 2 மணிக்கே சேகரித்த தேவையற்ற பொருட்களை போகி பண்டிகைக்காக எரிக்க ஆரம்பிப்பார்கள். உடனே நாம் நம் வீட்டில் உள்ளவர்களை எழுப்பும் போது அவர்கள் 4 மணி ஆகட்டும் என்று நம்மை காத்திருக்க வைப்பார்கள். போகி எரிக்கும் போது கொட்டு மோளத்தை அடித்து குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

அதன் பின் வீடு வாசலை கழுவி சுத்தம் செய்வார்கள். குறிப்பாக பொங்கல் பண்டிகையையொட்டி வீட்டில் வெள்ளை அடிப்பார்கள். அதாவது சுண்ணாம்பை நீரில் கரைத்து வீட்டில் வெள்ளை அடிப்பார்கள். இப்போது உள்ள சிறுவர்களுக்கு வெள்ளை அடிப்பதை பற்றி எல்லாம் நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பெரும்பாலான வீடுகளில் இளைஞர்கள் ‘வாட்ஸ்-ஆப்’ செயலில் போகி பண்டிகைக்கு ஸ்டேட்டஸ் வைத்து விட்டு தூங்கிவிடுகிறார்கள்.

தைப்பொங்கல்: தை மாதத்தின் முதல் நாள் கொண்டாடுவதே தைப்பொங்கல் ஆகும். ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். தைப்பொங்கல் அன்று விடியற்காலையில் சீக்கிரம் எழுந்து வீட்டு வாசலில் வண்ணக்கோலம் இடுவார்கள். பெரும்பாலான வீடுகளில் பொங்கல் கோலம் இடம்பெறும். பின் பசுமாடு சாணத்தில் பிள்ளையார் பிடித்து வழிபடுவார்கள். புதுப்பானையை அடுப்பில் வைத்து தீ மூட்டி பின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்து புதுப் பானையிலிட்டு கொதிக்க வைத்து பொங்கல் சோறாக்குவார்கள். அதை சூரியனுக்கும் பசு மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழ்வார்கள். மேலும் 21 வகையான காய்கறிகளை கொண்டு சமைத்து சூரிய பகவானுக்கு படைப்பார்கள். குறிப்பாக பொங்கல் பண்டிகைக்காக அதிகளவில் கரும்புகள் வாங்கி வருவார்கள்.குழந்தைகள் அந்த கரும்பை ருசித்து மகிழ்வார்கள்.

ஆனால் இப்போது எந்த குழந்தையும் கரும்பை விரும்பி உண்பதில்லை. பல வீடுகளில் கேஸ் அடுப்பில் பொங்கல் வைத்து விட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கி விடுகிறார்கள். 90-கள் மற்றும் அதற்கு முந்தைய காலக்கட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு குறைந்தது 10 திரைப்படங்களாவது வெளிவரும். அதை காண இளைஞர் பட்டாளமே படையெடுக்கும். இப்போது உள்ளது போல் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் எல்லாம் அப்போது கிடையாது. அதனால் டிக்கெட் எடுக்க நேராக சென்று அப்படியே திரைப்டத்தை பார்ப்பார்கள். ஆனால் இப்போது 2 திரைப்படங்கள் வெளிவருவதே பெரிய விஷயமாகி விட்டது.

மாட்டுப்பொங்கல்: தை மாதத்தின் இரண்டாவது நாள் கொண்டாடப்படுவதே மாட்டுப்பொங்கல். மக்களின் வாழ்வில் ஒன்றி நமக்கு பெரும் துணை புரியும் பசுவுக்கு நன்றி தெரிவிப்பதோடு உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கும் நன்றி கூறும் நாள் இது. பசு மற்றும் ஆவினத்தை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ண பெயிண்ட் அடித்து கழுத்தில் மணி கட்டி அலங்கரிப்பார்கள்.

பல கிராமங்களில் மாட்டு வண்டி பந்தயமும் நடைபெறும். முக்கியமாக நம் கலாச்சாரத்தின் அடையாளமாக கருதப்படும் ஜல்லிக்கட்டு பல இடங்களில் நடைபெறும். தற்போது விவசாயம் குறைந்து வருவதால் பல நடைமுறைகளும் மாறி வருகிறது. குறிப்பாக நகரங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு மாட்டுப்பொங்கல் பற்றி தெரிவதில்லை. ஜல்லிக்கட்டு போட்டியும் தடை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு இளைஞர்களின் எழுச்சியால் ஜல்லிக்கட்டு தடை நீங்கி பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

காணும் பொங்கல்: தை மாதத்தின் மூன்றாவது நாள் கொண்டாடப்படுவதே காணும் பொங்கல் ஆகும். உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திப்பதோடு பெரியவர்களிடம் ஆசி பெறும் நாள் இது. பெரியவர்ளிடம் ஆசி பெறும் போது குழந்தைகளுக்கு பெரியவர்கள் செலவுக்கு பணம் கொடுப்பார்கள். மேலும் உறவுகளின் உன்னதத்தை இந்த நாள் உணர்த்தும். ஆனால் இப்போது இந்நாளில் கைப்பேசியில் அனைவரையும் தொடர்பு கொண்டு பேசுவதே அரிதாகி விட்டது.

ஒரு காலத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகை இன்று ஏனோ கைப்பேசியிலும் தொலைக்காட்சியிலும் அடைபட்டு கிடக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது தூரத்தில் உள்ளவர்களை இணைப்பதற்கு கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் நாம் அதை காரணமாக கொண்டு அருகில் இருப்பவர்களுடன் விலகி நிற்கிறோம். பாரம்பரியத்தின் அடையாளமாக திகழும் பொங்கல் பண்டிகையின் சிறப்பை நம் குழந்தைகளுக்கு சொல்வதோடு இனி பொங்கல் பண்டிகையை அனைவருடனும் இணைந்து சிறப்பாக கொண்டாடுவோம். தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ச்சி பெற்றாலும் அந்த நாட்களில் கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகை நமக்கு மிகவும் நெருக்கமானது.

SHARE YOUR THOUGHTS

Bhuwaneshwaran
I'm always interested in watching daily news, like to create awareness in the society through my words in the article. Passionate to work in media as a script writer. Love to listen ilayaraja music and love to eat briyani

More From: Culture

DON'T MISS